காரைதீவு கடலில் நேற்று முன்தினம் சனிக்கிழமை தீர்த்தமாடச் சென்ற போது கடலில் மூழ்கி காணாமல் போன இரு மாணவர்களின் சடலங்களும் நேற்று அதிகாலை கரையொதுங்கியுள்ளன.
காரைதீவு மாவடி கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்வசம் சனிக் கிழமை நடைபெற்ற போது காரை தீவுக் கடலில் பெருமளவு பக்தர்கள் தீர்த்தமாடினர்.
இதன் போது ஐந்து மாணவர்கள் ஒன்றாகத் தீர்த்தமாடிய போது ஐவரையும் பாரிய அலையொன்று அடித்துச் சென்றது. எனினும், மூவர் காப்பாற்றப்பட இருவர் கடலில் மூழ்கினர்.
இவர்களை மீட்கப் பலத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அது முடியாமல் போனது.
இந்த நிலையில் காணாமல் போன காரைதீவு 2 நடராஜா வீதியைச் சேர்ந்த காண்டீபன் தனுஷ்காந்தன் (வயது 19) என்பவரது சடலம் காரைதீவு கரையிலும், காரைதீவு2, மத்திய வீதியைச் சேர்ந்த செல்லத்துரை ஜனார்த்தனின் (வயது 19) சடலம் மாளிகைக்காடு கரையிலும் நேற்றுக் காலை ஒதுங்கியது.
க.பொ.த. (உயர்தர) மாணவர்களான இவ்விருவரும் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்தனர். இவர்கள் காரைதீவு விபுலானந்தா மத்திய மகா வித்தியாலய மாணவர்களுமாவர்.
இருவரது சடலங்களும் மரண விசாரணையின் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்த மாணவர்களின் உடல்களை மீட்பதற்கும் அவற்றை ஆஸ்பத்திரியில் ஒப்படைப்பதற்கும் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். ஜீவராஜா பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தார்.