கொழும்பில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டை முன்னிட்டு தலைநகரிலுள்ள உல்லாச ஹோட்டல்கள் பெரும் வருமான இழப்பை எதிர்நோக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சார்க் மாநாட்டில் கலந்துகொள்ள வரும் பிரதிநிதிகள், தங்குவதற்கான ஏற்பாடாக இந்த உல்லாச ஹோட்டல்களின் வழமையான செயற்பாடுகளை அரசாங்கம் இடைநிறுத்துவதென மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கிணங்க இந்த நெருக்கடி நிலையை ஹோட்டல்கள் எதிர்நோக்கியுள்ளாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிணங்க, இம்மாதம் 25ஆம் திகதியிலிருந்து அடுத்த மாதம் 4ஆம் திகதிவரை இக்ஹோட்டல்களின் வழமையான நடவடிக்கைகள் யாவும் இடைநிறுத்தப்படவுள்ளன.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில் இக்ஹோட்டல்களை குறிப்பிட்ட நாட்களுக்கு மூடுவது தொடர்பான தீர்மானத்தை விரைவில் வெளியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அத்துடன் ஊழியர்களை அங்கத்தினர்களாகக் கொண்ட அனைத்து ஹோட்டல்களையும் சார்க் மாநாட்டு பிரதிநிதிகளின் பாதுகாப்புப் பிரிவினர் இக்காலப்பகுதியில் தங்குவதற்காக ஒதுக்குவதெனத் தீர்மானித்துள்ளோம்.
இந்த நிலையில் இம்மாநாட்டை முன்னிட்டு இந்த ஹோட்டல்கள் எந்தவொரு பாதுகாப்பு நெருக்கடிகளையும் சந்திப்பதை அரசாங்கம் விரும்பவில்லை என்பதையும் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
இக்காலப்பகுதியில் சார்க் மாநாட்டின் பிரதிநிதிகள் இக்ஹோட்டல்களில் தங்கவுள்ளமையால் இக்ஹோட்டல்களின் அறைகளை வாடகைக்குக் கொடுத்தல் மற்றும் விருந்தினர்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் நடத்தவேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஹோட்டல்கள் எதிர்நோக்கியிருக்கும் வருமான இழப்பு தொடர்பாக தலைநகர ஹோட்டல்களுக்கான கூட்டமைப்பு தெரிவித்துள்ள தகவலில் எமக்கேற்படவுள்ள வருமானப் பாதிப்பு குறித்து அரசாங்கத்திடமும் சுற்றுலாப் பயணத்துறை அமைச்சிடமும் எடுத்துக்கூறி இதற்கான குறைந்தபட்ச நஷ்டஈடு ஏதாவது வழங்கி உதவுமாறு கேட்டிருந்தோம். ஆனால் இது குறித்து அரச தரப்பிலிருந்து எதுவித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.