தனக்கு உயிராபத்து ஏற்பட்டால் அதற்கு அரசாங்கமே பொறுப்பென்று முன்னாள் இராணுவ அதிகாரியும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் வடமத்திய மாகாணத்திற்கான முதலமைச்சர் வேட்பாளருமான மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
வடமத்திய மாகாண சபைக்கான தேர்தல் பிரசாரத்தின் போது எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு அரசே முழுப் பொறுப்பாகும். எனக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென அரசிடம் நான் விடுத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. எனவே பல குழுக்களின் தாக்குதல் இலக்காக நான் தற்போது உள்ளேன்.
எனக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென தேர்தல் ஆணையாளர், பொலிஸ் மா அதிபர், ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்திருந்தேன். எனினும் எனது பாதுகாப்புக்கு ஒரு படையினர் கூட நியமிக்கப்படவில்லை. ஆனால் முன்னாள் முதலமைச்சர் 30 விஷேட அதிரடிப் படையினர், 28 பொலிஸார், 12 ஊர்காவல் படையினரின் பாதுகாப்புக்களுடன் உள்ளார்.
அரசின் ஆதரவாளர்களால் எனக்கு ஆபத்தேற்பட்டுள்ளது. எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கிருலப்பனை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸார் தனக்கு தெரிவித்திருப்பதாகவும் கூறினார்.