கூடுதலான மின்சாரம் விரயமாவதை தடுக்கும் நோக்கில்,அதிகூடிய மின் வலுவைக் கொண்ட, மின் உபகரணங்களை வெளிநாட்டிலிருந்து கொண்டு வருவதற்கு அடுத்தமாதம் முதலாம் திகதி முதல் தீர்வை அறவிடப்படுமென அரச வருவாய் நிதித்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலா பிட்டிய தெரிவித்தார்.
இதற்கிணங்க கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலுள்ள தீர்வையற்ற கடைகளில் மின் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான நடைமுறைகளில் கட்டுப்பாடுகள் கொண்டுவரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பான சுற்றுநிருபம், விமானநிலையத்திலுள்ள சகல கடைகளுக்கும், நிதி அமைச்சினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்;
வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் இத் தீர்வையற்ற கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு தடையில்லை. அவற்றில் எந்த மாற்றமும் இருக்காது. ஆனால் விமானநிலையக்கடைகளில் 32 அங்குலத்திற்கு மேற்பட்ட தொலைக்காட்சிபெட்டி, 500 லீற்றருக்கும் அதிக கொள்ளளவு குளிரூட்டிகள், ஆறு கிலோவிற்கு அதிகமான துணி துவைக்கும் இயந்திரங்கள் மற்றும் நான்கு அடுப்புகளை கொண்ட மின் அடுப்புகள் இந்த விமான நிலைய கடைகளில் விற்பனைக்கு அனுமதிக்கப்படமாட்டாது.
அத்துடன் குளிரூட்டிகள் மற்றும் பீங்கான் கழுவும் இயந்திரங்கள் விற்பனைவுக்கு அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்தார்.
தற்சமயம் நாடு எதிர்நோக்கியுள்ள மின் விநியோக நெருக்கடியை குறைத்துக் கொள்ளும் நோக்கில் இந்த நடைமுறையை அமுலுக்கு கொண்டுவரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.