கிழக்கு மாகாண சபையின் அடுத்த அமர்வு நாளை செவ்வாய்க்கிழமை காலை நடை பெறவிருக்கின்றது.
இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், பொதுச் செயலாளர் ஹஸனலி ஆகியோர் ராஜிநாமாச் செய்ததினால் ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு புதிய நியமனங்களை தேர்தல் திணைக்களம் இன்னும் மாகாண சபை பேரவைக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்று பேரவைச் செயலாளர் இ.தியாகலிங்கம் தெரிவித்தார்.
ரவூப் ஹக்கீமின் ராஜிநாமாவினால் திருகோணமலை மாவட்டப் பட்டியலிலிருந்து ஒருவரும் ஹஸனலியின் ராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு அம்பாறை மாவட்டப் பட்டியலிலிருந்து ஒருவரும் நியமிக்கப்படவிருக்கின்றனர். கூடுதல் விருப்புகளின் அடிப்படையிலேயே புதிய உறுப்பினர்களை தேர்தல் ஆணையாளர் நியமிப்பார்.
கடந்த மாகாண சபைத் தேர்தலில் ரவூப் ஹக்கீம் திருகோணமலை மாவட்டத்திலிருந்தும் ஹஸனலி அம்பாறை மாவட்டத்திலிருந்தும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தேசியப் பட்டியல் எம்.பி.யாக ரவூப் ஹக்கீம் ஏற்கனவே பதவி ஏற்றுவிட்டார். ஹஸனலி இம்மாதம் 22 ஆம் திகதி ஐ.தே.க. தேசியப் பட்டியல் எம்.பி.யாக பதவியேற்கவுள்ளார்.