கிளிநொச்சி முழங்காவில் பகுதிநோக்கி நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற விமானத் தாக்குதல் ,பீரங்கித் தாக்குதல் மற்றும் ஷெல் தாக்குதலில் பத்துப் பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். 7க்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் அழிந்துள்ளன.
மன்னார் பூநகரி வீதியில் நேற்றுக் காலை இலுப்பைக்கடவைக்குள் இராணுவத்தினர் நுழைந்ததையடுத்தே நேற்று மாலை இந்தத் தாக்குதல்கள் ஒரே நேரத்தில் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முழங்காவில் அன்புபுரம் மக்கள் குடியிருப்பு பகுதிகளை நோக்கியே கடற் பரப்பிலிருந்து பீரங்கிப் படகுகளும் இலுப்பைக்கடவைப் பகுதியிலிருந்து ஆட்லறி ஷெல் தாக்குதலும் சரமாரியாக நடத்தப்பட்ட போது குண்டு வீச்சு விமானங்களும் கடும் தாக்குதலை நடத்தியுள்ளன.
மாலை 3.40 மணி முதல் 5 மணிவரை இந்தத் தாக்குதல்கள் முழங்காவில் பிள்ளையார் கோவில் மற்றும் அதனையண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன.
இந்தத் தாக்குதலை சிறிதும் எதிர்பார்க்காத மக்கள் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறியோடிய போது பத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.
விமானப் படையின் நான்கு விமானங்கள் மக்கள் குடியிருப்பை இலக்கு வைத்து திடீரென தாக்குதல் நடத்திய போதே பீரங்கிப் படகுகளும் இந்தப் பகுதியை நோக்கி கடும் தாக்குதலை தொடுத்ததாகவும் பெருமளவு ஷெல்களும் தொடர்ச்சியாக வந்து வீழ்ந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதல்களில் அன்புபுரத்தைச் சேர்ந்த சிவகாமி (59 வயது), அருளானந்தம் அன்ரனிதாஸ் (வயது 41), இளையதம்பி யோகேஷ் (வயது 16), சித்திரவேல் ஜேசுதா (வயது 13), புவனேந்திரன் தமிழினி (வயது 3), பாக்கியராசா மனோரஞ்சிதம் (வயது 40), இரத்தினம் பாக்கியராசா (வயது 60), அ.யோகராசா (வயது 30), கோகிலராஜ் (வயது 24) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலையடுத்து முழங்காவில் பகுதியிலிருந்து பல நூற்றுக்கணக்கான மக்கள் கிளிநொச்சியை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர்.
முழங்காவில் மன்னார் பூநகரி வீதியிலிருப்பதும் குறிப்பிடத்தக்கது.