வத்தளையில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, மகள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.
வத்தளை அவரிவத்தை சந்திக்கு அருகில் தெலங்கபால பகுதியில் இரவு 10.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து நீர்கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த காரும், நீர்கொழும்பில் இருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த இ.போ.ச. பஸ் வண்டியும் நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் காரில் பயணம் செய்தவர்கள் நால்வரே அந்த இடத்தில் மரணமானார்கள். காரில் பயணம் செய்த மற்றொரு பெண் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து வத்தளைப் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் இறந்தவர்கள் மாபோல பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கார் அதிவேகமாக சென்று கொண்டிருந்ததாகவும் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் விபத்தில் சிக்கியதாகவும் விசாரணைகளில் இருந்து தெரிவிக்கப்படுகிறது.