* படையினர் உஷார் நிலையில்
இலங்கை சுதந்திரம் அடைந்தபின்னர் அதி உச்சப் பாதுகாப்புடன் நடைபெறவுள்ள சார்க் உச்சி மாநாட்டை முன்னிட்டு அதிக எண்ணிக்கையான படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சுமார் 12 ஆயிரம் பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் தீவிரமாக தேடுதல் , சுற்றி வளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமால் மெதவக்க தெரிவித்துள்ளார்.
வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். உள்ளூர் பாதுகாப்புப் பிரிவினருக்கும் மேலதிகமாக நூற்றுக் கணக்கான வெளிநாட்டுப் பொலிஸாரும், பிரத்தியேக பாதுகாப்பு ஊழியர்களும் குறிப்பாக இந்தியாவிலிருந்து அதிகளவான பாதுகாப்புப் பிரிவினரும் வருகை தந்துள்ளனர்.
இதேவேளை, சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளவென வருகை தரவுள்ள அரசியல் பிரமுகர்களும் உயர் அதிகாரிகளும் எந்தவித இடையூறுகளுமின்றி வருவதற்கான ஏற்பாடுகள் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விமான நிலைய பாதுகாப்புப் பிரிவினர் எந்நேரமும் உஷார் நிலையில் இருப்பதாகவும், அதற்கு மேலதிகமாகவும் பாதுகாப்பு செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் விமான நிலையத்தின் பிரதம பாதுகாப்பு அதிகாரி தம்மிக்க வீரசூரிய தெரிவித்தார்.
சார்க் மாநாட்டுக்கு வருகைதரும் பிரமுகர்களில் சிலர் அல்ஹைடா போன்ற சர்வதேச தீவிரவாத அமைப்புக்களின் கொலைப்பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக தெரிவிக்கப் படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.