Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, July 21, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Main News
மன்மோகன்சிங் அரசு மீது நாளை வாக்கெடுப்பு டில்லி அரசியல் நிச்சயமற்ற நிலை
[21 - July - 2008] [Font Size - A - A - A]
இந்தியாவில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசாங்கத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்காக நாளை செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில் ஆட்சியில் தொடர்ந்தும் நீடித்திருப்பதற்கு தேவையான உறுப்பினர்களின் ஆதரவை திரட்டுவதில் பிரதமர் மன்மோகன் சிங்கின் கூட்டணி அரசாங்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டது.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உத்தேச அணுசக்தி உடன்படிக்கை தொடர்பாக ஏற்பட்டிருக்கும் இக்கட்டான நிலையிலிருந்து தப்பிப்பிழைப்பதற்கான இறுதி முயற்சிகளில் நேற்று அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டிருந்தன.

545 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய பாராளுமன்றத்தின் கீழ்ச் சபையான லோக் சபையில் அறுதிப் பெரும்பான்மை பலத்தை அரசாங்கம் தக்கவைத்துக்கொள்ள 272 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

545 எம்.பி.க்களில் ஒரு எம்.பி.யின் ஆசனம் வெற்றிடமாக உள்ளது. மற்றொரு எம்.பி. நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ள முடியாத சட்டப்பிரச்சினை உள்ளது. இதனால், அரசாங்கம் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

இந்நிலையில், ஆளும் ஐக்கிய முற்போக்கு முன்னணியும் பிரதான எதிர்க்கட்சிகளும் தத்தமது முகாம்களுக்கு பலம் சேர்ப்பதற்கு சுயேச்சை எம்.பி.க்கள், சிறிய கட்சிகளின் ஆதரவை பெற்றுக் கொள்ளும் இறுதிப் பிரயத்தனத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தன.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு முன்னணிக்கு நேற்று நல்ல செய்திகளும் கிடைத்தன. அதேபோல் பாதகமான செய்திகளும் கிடைத்திருக்கின்றன.

ஆரம்பத்தில் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்து கருத்துத் தெரிவித்திருந்த உத்தரப்பிரதேச மாநிலத்தை தளமாகக் கொண்ட ராஜ்டிரிய லோக் தளத்தின் தலைவரான அஜித் சிங் அரசுக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக அறவித்துள்ளமை ஆளும் கூட்டணிக்கு பலத்த அடியாக அமைந்து விட்டது. அஜித் சிங்கின் கட்சிக்கு மூன்று ஆசனங்கள் உள்ளன. அதேபோன்று மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியும் அரசுக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக தெரிவித்திருக்கிறது. இக்கட்சிக்கும் 3 ஆசனங்கள் உள்ளன.

ஆயினும் இதுவரையும் கருத்தெதனையும் உறுதியாகத் தெரிவிக்காமல் இருந்து வந்த யார்க்கண்ட் முக்தி மோர்சா ஆளும் கூட்டணிக்கு வாக்களிக்கப் போவதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளமை காங்கிரஸ் கட்சிக்கு சிறியளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. யார்க்கண்ட் முக்தி மோர்சாவுக்கு 5 எம்.பி.க்கள் உள்ளனர்.

இதேவேளை, தனது பாட்டனாரான கருணாநிதியுடன் முரண்பட்டிருக்கும் தி.மு.க. எம்.பி.யான தயாநிதிமாறன் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக நேற்று சென்னையில் வைத்து அறிவித்திருக்கிறார். அத்துடன், மஜ்லிஸ் இ இத்தேகாதுல் முஸ்லிமீன் கட்சியின் ஒரேயொரு எம்.பி.யான அசாடுடீன் உவைசியும் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக நேற்று ஐதராபாத்தில் வைத்து அறிவித்திருப்பதுடன், அணு உடன்படிக்கையிலும் பார்க்க பாரிய தீங்கான சக்தி பாரதீய ஜனதாக் கட்சியே என்று கூறியுள்ளார்.

பரபரப்பான தினத்தில் மற்றொரு முக்கிய விடயமாக காணப்படுவது தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மதிய போசன விருந்துபசாரத்தில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் மாயாவதி கலந்து கொண்டமையாகும். இது பலரினதும் கவனத்தைத் திருப்பியுள்ளது. இந்த விருந்துபசாரத்திற்கு கம்யூனிஸ்ட் தலைவர்கள் பிரகாஷ் காரத், ஏ.பி. பரதன் மற்றும் இந்திய தேசிய லோகதாவும் அசாம் கணபரிஷத், மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகியவற்றின் தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை, புதுடில்லி நகரமெங்கும் சமாஜவாதிக் கட்சியின் தலைவர்கள் முலாயம் சிங் யாதவும் அமர்சிங்கும் அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவதுடன் பாரதீய ஜனதா மற்றும் முன்னாள் தோழமைக் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சிகளை கடுமையாக சாடி வருகின்றனர்.

சிவத்தக் கொடிக்கும் பாரதீய ஜனதாவின் வேட்பாளர் அத்வானிக்கும் வேறுபாடு இல்லை என்று முலாயம் சிங் யாதவ் கூறிவருகிறார்.

அவை உடன்படிக்கை சர்ச்சையால் ஜூலை 9 இல் மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 4 இடதுசாரிக் கட்சிகள் (59 எம்.பி.க்கள்) விலக்கிக் கொண்டன. ஆயினும் 39 எம்.பி.க்களைக் கொண்ட சமாஜவாதிக் கட்சி ஆதரவளிப்பதாக அறிவித்தது. ஆயினும் 39 எம்.பி.க்களில் 35 பேரே அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பார்களென்று சமாஜ்வாதிகள் நேற்று தெரிவித்தனர். அக்கட்சியின் மற்றொரு எம்.பி.யான அதிக் அகமட், தான் அரசுக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக கூறியுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு முன்னணிக்கு ஆதரவாக 269 எம்.பி.க்களும் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணிக்கு சாதகமாக 269 எம்.பி. க்களும் இருப்பதாக கூறப்பட்டது. ஆனாலும் இறுதி நேரத்தில் இந்த எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்படலாம்.

இது இவ்வாறிருக்க எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி நேற்று கருத்துத் தெரிவிக்கையில்;

தற்போதைய அரசியல் நெருக்கடி ஆளும் கூட்டணியே தானாக உருவாக்கிக் கொண்டதொன்று என்று கூறியுள்ளார்.

மன்மோகன் சிங்கின் அரசு கடுமையான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருப்பது உண்மை. இந்த நெருக்கடி அரசே உருவாக்கிக் கொண்டதாகும். அரசு தப்பிப்பிழைக்குமா? இல்லையா? என்பது ஜூலை 22 இரவு (நாளை செவ்வாய்க்கிழமை இரவு) தெரிந்து விடும் என்றும் அத்வானி கூறியுள்ளார்.

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com