ஆசிப்புக்கு 2 ஆவது கட்ட ஊக்கமருந்து சோதனை சுவிற்சர்லாந்தில் 28 ஆம் திகதி நடக்கவுள்ளது.
இந்தியாவில் நடந்த ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டில் டில்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஆடிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆசி ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார். அவர் தடை செய்யப்பட்ட "நாட்ரோலின்' மருந்தை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பிரச்சினை முடியும் வரை அவரை கிரிக்கெட்டிலிருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இடைநிறுத்தியுள்ளது.
ஆனால், தான் போதைப் பொருள் எதையும் பயன்படுத்தவில்லையென்று ஆசிப் மறுத்தார். முதல் கட்ட சோதனையில் தவறு நடந்திருக்கலாம். எனவே, 2 ஆவது கட்ட சோதனையான "பி' மாதிரி சோதனையை நடத்த வேண்டுமென்று ஐ.பி.எல்.க்கு ஈமெயில் கடிதம் அனுப்பினார்.
இதனை பெற்றுக்கொண்ட ஐ.பி.எல். நிர்வாகிகள், ஆசிப்புக்கு பதில் அனுப்பியுள்ளனர். அதில், 28 ஆம் திகதி "பி' மாதிரி சோதனை நடத்தப்படுமென்று தெரிவித்திருக்கிறார்கள்.
வழக்கமாக ஒரு வீரருக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தும்போது அவர்களின் மாதிரிகள் (சிறுநீர்) இரண்டாக பிரிக்கப்படும். அவற்றில் ஒரு பகுதி பரிசோதனைக்கு அனுப்பப்படும். மற்றொரு பகுதி பாதுகாப்பாக வைக்கப்படும். முதல் பகுதி சோதனையில் சந்தேகம் ஏற்படும் தேவை ஏற்படும் பட்சத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் மற்றொரு மாதிரியும் சோதனைக்குள்ளாக்கப்படும். அந்த சோதனையைத்தான் ஆசிப் கேட்டிருக்கிறார்.
சுவிற்சர்லாந்தில் உள்ள உலக ஊக்கமருந்து தடுப்புக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை கூடத்தில் ஆசிப்பின் "பி' மாதிரி சோதனை நடைபெறவுள்ளது.
இதற்கிடையே போதைப்பொருள் வைத்திருந்ததாக ஆசிப் டுபாயில் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 3 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு தனது விசாரணையை தொடங்கவுள்ளது. இந்த வழக்கு தொடர்பான 6 பக்கம் கொண்ட அறிக்கையை டுபாய் அதிகாரிகள் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு அனுப்பியுள்ளனர். அதில் ஆசிப் தடைசெய்யப்பட்ட ஓப்பியம் என்ற பொருளை தனது பையில் வைத்திருந்ததாகவும், சிறுநீர் சோதனையில் அவர் போதைப்பொருள் எதுவும் சாப்பிடவில்லை என்பது தெரிய வந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த அறிக்கையை, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, ஊக்கமருந்து தடுப்பு கழகத்துக்கு அனுப்புமா? இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால், ஊக்கமருந்து தடுப்பு கழக விதிப்படி, ஓப்பியம் தடை செய்யப்பட்ட பொருளில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நிர்வாகி ஒருவர் கூறியிருக்கிறார்.
இந்த வழக்கு தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை குழு முன் 23 ஆம் திகதி ஆஜராகும்படி ஆசிப்புக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை 2 அல்லது 3 நாட்களில் விசாரணை முடிந்துவிடுமென்றும் தெரிவிக்கப்படுகிறது.