சாம்பியன் கிண்ணத் தொடரை பாகிஸ்தானில் நடத்த ஐ.சி.சி., பச்சை கொடி காட்டியுள்ளது.
இங்கு பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்த குழு திருப்தி தெரிவித்துள்ளதாக தெரிகிறது. ஐ.சி.சி., சார்பில் சாம்பியன்ஸ் கிண்ணத்தை (மினி உலகக் கிண்ண) தொடர் வரும் செப்டெம்பரில் பாகிஸ்தானில் நடக்கவுள்ளது. ஆனால் அடுத்தடுத்து ஏற்படும் குண்டு வெடிப்பு சம்பவத்தால் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகளின் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆசியக் கிண்ண இறுதியாட்டத்தின் போது இஸ்லாமாபாத், கராச்சி போன்ற இடங்களில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 10 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
இதனிடையே குண்டு வெடிப்பிற்குப் பின் ஏற்பட்டுள்ள உண்மை நிலைமையை ஆய்வு செய்த ஐ.சி.சி., பாதுகாப்பு அதிகாரி நிக்கோலஸ் ஸ்டெயின் தலைமையிலான குழு அனுப்பியுள்ள அறிக்கையில்;
""கராச்சி, லாகூர், ராவல்பிண்டி முதலிய இடங்கள் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதற்கு பாதுகாப்பான இடங்கள்தான். இது பற்றிய விரிவான அறிக்கையை இந்த வாரம் டுபாயில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேரில் அளிப்பேன். இது இஸ்லாமாபாத், கராச்சியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பிற்கு பின் செய்யப்பட்ட ஆய்வு அறிக்கை,' என்று குறிப்பிட்டுள்ளார்.
போட்டிகளை பாகிஸ்தானில் நடத்துவது சம்பந்தமாக அனைத்து நாடுகளின் கிரிக்கெட் சபைகளுடன் ஆலோசித்த பின் ஐ.சி.சி., முடிவு செய்யும்.