பாகிஸ்தான் கிரிக்கெட் சபையை முற்றிலும் கலைத்துவிட்டு புதிதான தொழில்பூர்வ அதிகாரிகளை நியமிக்கவேண்டுமென்று பாகிஸ்தானின் முன்னாள் கப்டனும் பயிற்சியாளருமான ஜாவிட் மியாண்டாட் கூறியுள்ளார்.
தற்போது அதிகாரத்தில் உள்ளவர்களால் நாட்டின் கிரிக்கெட்டிற்கு எந்த வித பயனுமில்லை என்பதோடு, இருந்துவரும் கிரிக்கெட் திறன்களும் மழுங்கி வருகின்றன என்று அவர் பத்திரிகை ஒன்றில் கூறியுள்ளார்.
ஒவ்வொரு நாளும் புதுப்புது சர்ச்சைகள் எழுகின்றன.அவற்றை எதிர்கொள்ள தற்போதிருக்கும் அதிகாரிகளுக்கு திராணியில்லை. எனவே மேலும் சீரழியாமல் தடுக்க ஜனாதிபதி முஷாரப் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
தான் கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்காவில் இருந்ததாகவும் அங்குள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, கிரிக்கெட் ஆட்டம் ஆகியவை குறித்து பலத்த அதிருப்தி வெளியிட்டதாகவும் அவர் அந்தப் பத்திரிகையில் கூறியுள்ளார்.
அதேபோல், சொய்ப் அக்தர், மொகமது ஆசிப் விவகாரம் குறித்தும் தனது கறாரான பார்வையை மியாண்டாட் வெளியிட்டுள்ளார்.
முதலில் ஊக்க மருந்து விவகாரத்தில் சொய்ப்,ஆசிப் ஆகியோரை தடை செய்தது பி.சி.பி.ஆனால், அவர்களே பின் தீர்ப்பாயம் ஒன்றை உருவாக்கி தங்களது முடிவில் பல்டி அடித்து, இருவரையும் அணியில் சேர்க்க ஏற்பாடு செய்தனர். ஏனெனில் இவர்களால் தான் போட்டிகளை வெல்ல முடியுமென்று நம்பினார்கள்.ஆனால், அப்படியும் நடக்கவில்லை என்றும் மியாண்டாட் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.