Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, July 23, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
பிறப்புச் சான்றிதழ் இன்றி அவதியுறும் மலையக மக்கள்
[23 - July - 2008] [Font Size - A - A - A]
த.மனோகரன்

மலையகத்தின் பெருந்தோட்டங்களில் வாழும் தமிழ் மக்களில் பல்லாயிரக் கணக்கானவர்கள் பிறப்புச்சான்றிதழ் இல்லாமல் உள்ளனர். இலங்கையில் நிலவும் சட்டத்தின்படி ஒரு குழந்தை பிறந்தவுடன் அது பிறந்தமைக்கான அத்தாட்சி செய்யும் பதிவு இடம்பெற்று பிறப்புச்சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.

பிறப்புச் சான்றிதழ் என்பது பிறப்பை உறுதி செய்வதற்கு மட்டும் ஆன ஆவணமல்ல. பிறந்த இடம், திகதி, பெற்றோர் விபரம், பெயர், பிறந்த மாவட்டம், இனம் எனப் பல விபரங்களை உள்ளடக்கிய ஆவணமாகும்.

குறித்த பிறப்புச் சான்றிதழ் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுமதிக்கவும், தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளவும், வாக்காளராகப் பதிவு செய்து கொள்ளவும், தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளவும், கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளவும் இது போன்ற பல தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் மிக அவசியமான ஆவணமாகவுள்ளது.

பெறுமதிமிக்கதும், அவசியமானதுமான பிறப்புச் சான்றிதழ்கள் இன்றி மலையகத் தோட்டப் பகுதியில் பெருந்தொகையானோர் இருப்பது நாட்டின் சட்டதிட்டங்கள் உரியபடி பேணப்படுவதில் கரிசனை அற்ற நிலையை வெளிக்கொண்டு வருகின்றது.

இவ்வாறான நிலைக்கு யார் பொறுப்பேற்பது? இக்குறைபாட்டை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பது தொடர்பில் எவராவது பொறுப்புடன் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. ஒரு சமுதாயத்தையே பல்வேறு வழிகளில் பின்னடைவுக்கு இட்டுச் சென்றுள்ளது. இப்பிறப்புச் சான்றிதழ் இல்லாத நிலை என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.

தேர்தல்கள் வரும்போது அத்தேர்தல்களில் வாக்களிப்பதற்குத் தமது ஆளடையாளத்தை நிரூபிப்பதற்கான ஆதாரமாக ஒவ்வொரு வாக்காளரும் தமது தேசிய அடையாள அட்டையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பது சட்டமாகவுள்ளது.

நிலைமை இவ்வாறிருக்கும் போது மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் சத்தியக் கடதாசியைச் சமர்ப்பித்து வாக்காளர்களாகப் பதிவு செய்து கொள்ளலாம் என்று மலையகத் தலைமைகள் கூறி வருகின்றன. அவ்வாறும் நடைபெற்றும் வருகின்றன. ஆனால், பல்லாயிரக் கணக்கான தோட்டப்புறத் தமிழர்களின் பெயர்கள் வாக்காளராகப் பதிவாகாமலிருப்பது தொடர்பில் அக்கறை செலுத்தப்படுவதில்லை. வாக்காளர் பதிவில் அக்கறைப்படுவதோ, அதுபற்றி சிந்திப்பதோ இல்லையென்பதே உண்மை.

இன்றுள்ள நிலை என்ன? வாக்காளர் இடாப்புகளில் பெயர்கள் உள்ள பல்லாயிரக்கணக்கானவர்களுக்குத் தேசிய அடையாள அட்டை இல்லாமையால் வாக்களிக்க முடியாத நிலையுள்ளது.

தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்குத் தடையாக இருப்பது பிறப்புச் சான்றிதழ் இல்லாமையாகும். தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது சமர்ப்பிக்க வேண்டிய முக்கியமானதும், முதன்மையானதுமான ஆவணம் பிறப்புச் சான்றிதழாகும்.

மலையகத் தோட்டங்களில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தோட்ட நிர்வாகங்கள் குழந்தை பிறந்ததாக ஒரு அத்தாட்சித் துண்டு அதாவது ஆவணமொன்றை வழங்குகின்றன. அதைத் தோட்டத் தொழிலாளர்கள் பிறப்புச் சான்றிதழ் என்று கருதி விடுகின்றார்கள். இது அவர்களது புரியாத்தன்மை. காலங்காலமாக இதுவே நடைமுறையிலுள்ளது.

வைத்தியசாலைகளில் பிறக்கும் பிள்ளைகளின் பிறப்பு விபரத்தை அவ் வைத்தியசாலைகள் உரியபடி பதிந்து மாவட்ட பிறப்புப் பதிவாளருக்கு அனுப்பி அங்கு முறைப்படி பதிந்து அப்பதியப்பட்ட உத்தியோக பூர்வ பிறப்புச் சான்றிதழ் குழந்தையின் பெற்றோரிடம் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்நடைமுறை பொறுப்புடன் கைக்கொள்ளப்பட்டால் இன்று மலையகத் தோட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணகானவர்களின் பிறப்புச் சான்றிதழ் இல்லாதநிலை ஏற்பட்டிருக்காது.

தேர்தல்கள் நடைபெறும் காலங்களில் மட்டும் வாக்காளர்கள் பற்றிய சிந்தனை வருவதும், அவர்களின் பதிவுகள் எவ்வாறுள்ளன, எவ்வளவு பேர் எங்கெங்குள்ளனர் என்பதைத் தெரிந்து கொண்டு அவர்களுக்கு வாக்குறுதிகள் வழங்கி வாக்கு வேட்டையாடுவதற்காக வாக்காளர் இடாப்புகளைத் தேடியெடுத்து தூசு தட்டிப்பார்க்கும் அரசியல்வாதிகளே இன்று மலையகத் தமிழரின் தலைவிதியை நிர்ணயிப்போராயுள்ளனர் என்றால் அதுவே உண்மை.

வாக்களிப்பதற்குத் தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகத் தேசிய அடையாள அட்டையைச் சமர்ப்பிப்பது கட்டாயமானது என்று சட்டம் கொண்டுவரப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆண்டுகள் பல கடந்துவிட்டன. தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளாதவர்கள் அவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக ஓராண்டுகாலம் குறித்த சட்டம் நடைமுறைக்கு வருவது பின்போடப்பட்டது. இதை நமது தமிழ் அரசியல் அமைப்புகள் மறந்திருக்க முடியாது.

இருந்த போதிலும் பெருந்தோட்டத்துறையில் இன்னும் பெருந்தொகையான தமிழ் மக்கள் தேசிய அடையாள அட்டை இன்றியே உள்ளனர் என்றால் அதற்கான பொறுப்பை அம்மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் தொழிற்சங்கங்களும், அரசியல் அமைப்புகளுமே ஏற்க வேண்டும். சமூகம் சார்ந்த இப்பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டிய பாரிய பொறுப்பிலிருந்து அவை ஒதுங்கிவிட முடியாது. ஒதுங்கிவிடவும் கூடாது. சமூகம் சார்ந்த இவ்விடயத்திற்கு முக்கியத்துவமளிக்கப்பட வேண்டும்.

மலையகத்தில் எழுபதிற்கும் அதிகமான தொழிற்சங்கங்களும், மலையகத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் பத்திற்கு மேற்பட்ட அரசியல் அமைப்புகளும் உள்ளன. புதிது புதிதாக உருவாகியும் வருகின்றன. பெருந்தோட்டங்களில் தொழிற்சங்கம் அமைப்பது ஒரு வியாபாரம் போன்றேயுள்ளது. தொழிலாளரின் அடிப்படை உரிமைகள், தேவைகள் தொடர்பில் எந்த அளவில் அக்கறை செலுத்தப்படுகின்றது என்பதை ஆய்வு செய்தால் வேதனை மட்டுமே மிஞ்சுவதாயுள்ளது. யதார்த்தமான இந்த உண்மையை வெளிப்படுத்துவது விழிப்புணர்வை ஏற்படுத்தி செயற்பாட்டைத் தூண்டுவதற்காகவேயன்றி காழ்ப்புணர்ச்சியால் அல்ல என்பதைக் கூறி வைக்க வேண்டும்.

இன்று மலையகத் தமிழ் மக்கள் பிரதிநிதிகளென்று கூறப்படும் ஒன்பது தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களில் அமைச்சரவை அந்தஸ்துள்ள இருவரும் பிரதி அமைச்சர்களாக ஏழுபேரும் உள்ளனர். அதேபோல் மாகாண சபைகளிலும் மாநகர, நகர, பிரதேச சபைகளிலும் பலர் அரசியல் ரீதியாகத் தெரிவாகி அங்கம் வகிக்கின்றனர். இவர்களெல்லாம் மலையகத் தோட்டப் பகுதி தமிழ் வாக்காளரால் வாக்களித்துத் தெரிவு செய்யப்பட்டவர்களேயன்றி பிற சமூகத்தினரால் தெரிவு செய்யப்பட்டவர்கள் அல்ல என்று துணிந்து கூறலாம். வாக்குரிமை இருந்து வாக்களிக்கும் தகைமை இருந்தால் தான் இவ்வாறு அரசியல் நிர்வாக அமைப்புகளுக்குத் தெரிவு செய்யப்படலாம்.

ஒரு சிலர் கூறுவது போன்று, அமைச்சர் பதவிகளோ, பிரதி அமைச்சர் பதவிகளோ கிடைத்துவிட்டால் மட்டும் மலையகத் தமிழ்ச் சமூகம் உரிமை பெற்றுவிட்டதாக, அரசியல் அதிகாரம் பெற்றுவிட்டதாக, நாட்டின் தேசிய நீரோட்டத்தில் இணைந்துவிட்டதாகக் கொள்ள முடியாது. அது முற்றிலும் தவறானதும், பொறுப்பற்றதுமான சிந்தனையாகும்.

வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்குத் தேசிய அடையாள அட்டை தேவைப்படுகின்றது. தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்குப் பிறப்புச் சான்றிதழ் தேவைப்படுகின்றது.

இவ்வாறான நிலையில், பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு அவற்றைப் பெற்றுக் கொள்ள ஏதாவது வழிவகை காணப்பட வேண்டும். அதற்கு வழிகாட்டப்பட வேண்டும். இந்நிலை தொடரக்கூடாது. தொடரவிடப்படக்கூடாது. தொடர்ந்தும் இந்நிலை நீடித்தால் அது மலையகத் தோட்டப்பகுதித் தமிழர்களின் எதிர்காலத்தைத் தொடர்ந்தும் பாதித்துக் கொண்டேவரும்.

விடயம் தெரிந்த, படித்தவர்களாகக் கருதப்படும் அரசியலமைப்புகளைச் சேர்ந்தவர்களால் தயாரிக்கப்படும் பாராளுமன்ற, மாகாண சபை, மாநகர, நகர, பிரதேச சபைகளுக்கான வேட்பு மனுக்களே உரியமுறையில் பூர்த்தி செய்யப்படாமல் நிராகரிக்கப்படும் போது கல்வியறிவில் பின்தங்கிய தொழிலாளர்களுக்கு படிவங்களை உரியபடி பூர்த்தி செய்து உரிய அலுவலகங்களில் சமர்ப்பித்துத் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளமுடியாத நிலையுள்ளது. மொழிப் பிரச்சினையும் ஒரு காரணியாக அமைந்துள்ளது.

தொழிற்சங்க, அரசியல், தனிப்பட்ட கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பாலிருந்து மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகள், தேவைகள் ஆராயப்பட்டு நிவாரணம் காணப்படவேண்டும். சமூகப் பிரச்சினையை சமூகக் கண்கொண்டே நோக்கும் பக்குவம் ஏற்பட வேண்டும். அதுவே இன்றைய அவசியத் தேவையாகும்.

பிறப்பு தொடர்பாகத் தோட்ட நிர்வாகங்களால் வழங்கப்பட்டுள்ள ஆவணத்தை அடிப்படையாகக் கொண்டோ அல்லது வேறு விபரங்களின் அடிப்படையிலோ பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு அவற்றைப் பெற்றுக் கொடுக்கவும், தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொடுக்கவும் உரிய செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதற்காகத் தோட்டங்கள் தோறும் விபரங்களைத் திரட்டிக் கொள்ள தொழிற்சங்கங்களின் தோட்டக் கமிட்டிகளையும், சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் போன்றோரையும் பயன்படுத்தமுடியும்.

தேவையை உணர்ந்து மக்களின் அடிப்படை உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கும் பணியை இனியும் பொறுப்புள்ளவர்கள் தட்டிக்கழிக்கமாட்டார்கள் என்று நம்பலாம் அல்லவா?

Email this page Your Opinion Print this page
டில்லிகொழும்பு அந்நியோன்யத்தில் நெருடலை ஏற்படுத்தியிருக்கும் பொருளாதார பங்குடைமை ஒப்பந்தம்
பிறப்புச் சான்றிதழ் இன்றி அவதியுறும் மலையக மக்கள்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com