Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, July 23, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
டில்லிகொழும்பு அந்நியோன்யத்தில் நெருடலை ஏற்படுத்தியிருக்கும் பொருளாதார பங்குடைமை ஒப்பந்தம்
[23 - July - 2008] [Font Size - A - A - A]
* கடும் போக்காளரின் அழுத்தத்தால் உடன்படிக்கையை தாமதமாக்கும் இலஙகை

வ.திருநாவுக்கரசு

அடுத்த வாரம் கொழும்பில் நடைபெறவுள்ள "சார்க்' (தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்புச் சங்கம்) மாநாட்டில் எட்டு உறுப்பு நாடுகள் மட்டுமல்லாமல் சீனா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, சில ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல உலக நாடுகள் பார்வையாளர்களாகவும் பங்குபற்றவுள்ளன. எனவே, சர்வதேச ரீதியில் நற்பெயரும் பல முன்னுரிமைகளும் கிட்டும் எனும் எண்ணங்கொண்டே மாலைதீவில் நடைபெறவிருந்த 15 ஆவது உச்சிமாநாட்டினை கொழும்பில் நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் காய்கள் நகர்த்தியிருந்தது. ஆனால், அதற்கு எதிர்மறையான காரியங்கள் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. அதாவது மாநாடு ஆரம்பிக்கவுள்ள வேளையிலேயே இலங்கை இந்திய உறவுகளில் விரிசல்கள் ஏற்படக்கூடிய வகையில் சில நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. பிராந்திய வல்லரசுத்தன மேலாதிக்கத்தினைச் சித்திரிக்கும் வகையில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வழங்கப்படவுள்ள பாதுகாப்பு என்ற போர்வையில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் என்.கே.நாராயணனின் நேரடிக் கண்காணிப்பில் அந்தக் கப்பல்கள், உலங்கு வானூர்திகள் மற்றும் ஆயிரக்கணக்கான துருப்புகள் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக இலங்கை அரசாங்கத் தரப்பில் மன உளைச்சல்கள் மறைந்திருக்கின்றன.

CEPA ஒப்பந்தம் பின்தள்ளப்படுதல்

மேலும், (அ) இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலானதும் எல்லோர்களதும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்ததுமாகிய "செப்பா' (CEPA) எனச்சுருக்கிக் கூறப்படும்."முழு அளவிலான பொருளாதார பங்குடைமை ஒப்பந்தம்' மற்றும் (ஆ) தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் ஆகிய இரு பிரதான விடயங்கள் தொடர்பாக முறுகல் நிலைமைகள் உருவெடுத்திருப்பதைக் காணலாம். (CEPA) வைப் பொறுத்தவரை இது முன்னர் இரு அரசாங்கங்கள் தரப்பினராலும் ஆராயப்பட்டுள்ளதாகவும் அடுத்த வாரம் "சார்க்' மாநாட்டுக்கு மன்மோகன் சிங் வந்தடைவதற்கு முன்னதாக கைச்சாத்திடப்படவிருந்ததாகவும் அறியப்பட்டது. உண்மையில் இந்த விடயம் கடந்த நான்கு வருடங்களாகப் பரிசீலிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும் "சார்க்' நாடுகள் எல்லாமே முதலாளித்துவ நாடுகள், முதலாளித்துவ உலகமயமாக்கலின் ஒரு வெளிப்பாடகவே (CEPA) அமைகின்றது எனலாம். அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த 3 இந்திய உயரதிகாரிகள் குழுவினர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்தபோது இந்த விடயமும் கலந்துரையாடப்பட்டது. (CEPA)கைச்சாத்திடப்படுவதற்கு ஜனாதிபதி இணக்கம் வெளிப்படுத்தியதாக அறிக்கைகள் தெரிவித்தன. இதற்குப் பொறுப்பான அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வேண்டிய ஆவணங்களைத் தயாரித்து விட்ட நிலையில் 16.07.2008 இல் நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி பெற்று ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவிருந்தது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத் எல்லாம் சரி எனும் சமிக்ஞையை புதுடில்லிக்குக் கொடுத்தும்விட்டார். ஆனால், திடீரென ஒரு தின திருப்பம் ஏற்பட்டது. ஏனென்றால் குறித்த ஒப்பந்தம் அரசதரப்பினர் சிலரின் மனதில் அங்கலாய்ப்பினை பதித்திருந்த நிலையில் அதனைத் தடுத்தாள்வதற்கு வியூகம் அமைக்கப்பட்டது.

சம்பிக்க, வீரவன்ச இருமுனைத் தாக்குதல்கள்

அதாவது ஒப்பந்தத்தின் மீது இருமுனைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட ஒரு முனையில் ஹெல உறுமய தலைவரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க இலங்கையின் பாதுகாப்பு தொடர்பாக இந்தியா அன்று முதல் இழைத்து வந்த இராஜதந்திர விழுமியங்களுக்கு பங்கமான கொடுமைகள் சம்பந்தமாக குற்றம் சுமத்தினார். 1984 இல் ஜே.ஆர்.ஜயவர்த்தன அரசாங்கத்தின் மீது தலையீடுகள் மேற்கொண்டதாக சாடியிருந்தனர். இந்தியா விடுதலைப் புலிகளுக்கு அளித்த பயிற்சி மற்றும் இலங்கை மீதான தலையீடு காரணமாக விடுதலைப் புலிகள் அதிகளவு பலமடைந்துவிட்டதாகவும் இந்தியா அத்தகைய செயற்பாடுகளில் தொடர்ந்து ஈடுபடுமானால் 1980 களில் காணப்பட்டது போன்று இந்தியாவுக்கு எதிராக விபரீதமான விளைவுகள் ஏற்பட இடமுண்டு எனவும் ரணவக்க எச்சரித்துள்ளார். இந்தியா இன்று விடுதலைப் புலிகளுக்கு எந்தவிதத்திலாவது உதவிக்கரம் நீட்டத் தலைப்படுமென ரணவக்க நினைத்தால் அதைவிட அறிவிப்புத்தனம் கிடையாது எனலாம்.

மறுபுறத்தில் ஜே.வி.பி.யிலிருந்து பிரிந்து அமைக்கப்பட்ட தேசிய சுதந்திர முன்னணியின் (என்.எவ்.எவ்.) தலைவரும் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஆத்ம நண்பராய் விளங்குபவருமாகிய விமல் வீரவன்ச குறித்த ஒப்பந்தமானது (CEPA) இந்தியாவுக்கே அதிகம் வாய்ப்பதாகவும் இந்தியா இலங்கையின் பொருளாதாரம் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு இடமளிக்க வல்லது எனவும் கடிந்துள்ளார். இந்தியா இலங்கையின் "பண்டங்கள் மற்றும் சேவைகள்' துறையின் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடிய நிலையில் தொழிலறிஞர்கள் மட்டத்தில் உள்ள நிதியப் பிரஜைகள் கூட இலங்கையில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு இருப்பதால் இலங்கைப் பிரஜைகள் வேலையில்லாத திண்டாட்டத்தை எதிர்நோக்க நேரிடும் எனவும் வீரவன்ச எச்சரித்துள்ளார். அத்தோடு, இவ்விடயம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் எனவும் அறை கூவல் விடுத்துள்ளார். 16.07.2008 இல் நடைபெறவிருந்த மந்திரி சபைக் கூட்டத்தில் அனுமதிபெற்று ஒப்பந்தத்தினைக் கைச்சாத்திடத் தயாராக்கி விடலாமென அமைச்சர் பீரிஸ் எதிர்பார்த்திருந்தார். வீரவன்சவை சாந்தப்படுவதற்கு பீரிஸ் மேற்கொண்ட முயற்சியும் பலிக்கவில்லை. இது தொடர்பாக பீரிஸ் மீது ஜனாதிபதி எரிந்து விழுந்ததோடு, வெளிநாட்டமைச்சர் றோகித்த போகொல்லாகமவை அழைத்து ஒப்பந்தத்திற்கு எதிர்மறையான நிலைப்பாட்டினை முன்வைக்குமாறும் பணித்தார். பீரிஸுடனான பகைமையை வெளிப்படுத்துவதற்கும் போகொல்லாகம சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார்.

குணதாச அமரசேகர புழுங்குகிறார் இலங்கை இந்தியாவின் மாகாணம் ஆகிவிடும் என்கின்றார்

இதனிடையில் குறித்த ஒப்பந்தமானது இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு குந்தகமானவை மட்டுமல்லாமல் இலங்கை இந்தியாவின் ஒரு மாகாணம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும் எனவும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் (PNM) தலைவர் குணதாச அமரசேகர நடத்திய ஊடகவியலாளர் மாநாடொன்றில் கூறியுள்ளார்.

ஏற்கனவே, நடைமுறையிலுள்ளதாகிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் 2000 ஆம் ஆண்டில் இந்தியா ரூ.450 கோடி இலாபம் ஈட்டியதாகவும் இலங்கைக்குக் கிடைத்தது ரூ.40 கோடி மட்டும் எனவும் அதேபோலவே 2000 ஆம் ஆண்டில் இந்தியா பெற்றுக் கொண்டது ரூ.3150 கோடி எனவும் இலங்கை பெற்றுக் கொண்டது ரூ.550 கோடி மட்டும் எனவும் அமரசேகர புழுங்கியுள்ளார்.

விமல் வீரவன்சவும் (PNM) இன் உயிர்நாடியாக விளங்குபவர்ளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உலக வங்கியின் முன்னாள் பொருளியல் நிபுணராக விளங்கியவராகிய மன்மோகன் சிங் முதலாளித்துவ உலகமயமாக்கல் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் கைதேர்ந்தவர் என்பதை விபரிக்க வேண்டியதில்லை. குறித்த ஒப்பந்தத்தினை இந்தியாவை விட இலங்கைக்கு கூடுதலான நன்மை ஏற்பட வேண்டுமென்று இந்திய அரசாங்கம் மனமுவந்து செய்து கொள்ளத் தலைப்பட்டு நிற்கிறது என்று சொல்வதற்கில்லை.

1987 இல் இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்து கொண்டபோதும் இலங்கை நலன் அல்லது இலங்கைத் தமிழர் நலன் அன்றி இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன் அதாவது, திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் சுவீகரிப்பு போன்ற இந்திய நலன்களே மேலோங்கி நின்றதை நாம் மறந்து விடுவதற்கில்லை.

மற்றும் இலங்கை சின்னஞ்சிறிய சந்தை. இந்தியா மிகப்பெரிய சந்தை என்பதையும் வர்த்தக முயற்சிகளில் இலங்கை அதிகாரிகள் மத்தியில் திறமையின்றி மெத்தனப்போக்கே மேலோங்கி நிற்பதைக் காணலாம்.

இந்தியாவுடன் மட்டுமல்லாமல் இதர நாடுகளுடனான வர்த்தக முயற்சியிலும் கூட அநேகமாக ஏற்றுமதி வருமானம் குறைவாகவும் இறக்குமதி செலவீனம் அதிகரித்தும் எதிர்மறையான வர்த்தக மீதியே காணப்படுவதையும் காண முடிகிறது.

தேசப்பற்றாளர்கள் என்ற போர்வையில் செயற்பட்டுவரும் அதி தீவிர தேசியவாதிகள் நாட்டைக்கட்டி எழுப்புவதற்குப் பதிலாக நாட்டின் ஒற்றுமைக்கும் உலை வைத்தது தான் இதற்கெல்லாம் காரணம் என்பதை குணதாச அமரசேகர, விமல் வீரவன்ச ,சம்பிக்க ரணவக்க போன்றோர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தமிழக மீனவர்கள் பிரச்சினை அடுத்து தமிழக மீனவர்கள்

இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படுவதாகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இன்று தமிழ்நாட்டில் ஆங்காங்கே முறுகல் நிலையும் போராட்டங்களும் காணப்படுகின்றன. முன்னாள் இந்தியப்பிரதமர் இந்திராகாந்தி அன்றைய இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவிடம் கச்சதீவை வெள்ளித்தட்டத்தில் வழங்கியதன் பின்னரே தமிழக மீனவர் இலங்கைக் கடற்படையினரின் அட்டூழியங்களுக்கு ஆளாக்கப்பட்டு வருவதாக அறியக்கிடக்கிறது.

இந்தியப் பிரஜைகள் கச்சதீவுக்கு வழிபாட்டுக்குச் செல்வதற்கோ வலைகளை காய்வனவு செய்வதற்கோ சூழவுள்ள கடற்பகுதியில் மீன்பிடிப்பதற்கோ தடை எதுவும் இல்லை என அன்று இருதரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த போதும் அவையெல்லாம் தண்ணீரில் எழுதிய விடயங்களாகி விட்டன. 400 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கடந்த காலங்களில் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் மீனவர்கள் தொடர்ந்து சுட்டுக் கொல்லப்படுவதாகவும் அறியப்படுகிறது. தமிழக அரசியல் தலைவர்கள் ராமதாஸ், விஜயகாந்த், ஜெயலலிதா போன்றோர் போர்க் கோடி உயர்த்தியுள்ளனர்.நிர்ப்பந்தம் காரணமாக தமிழக முதல்வர் கருணாநிதி அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை நடத்தியுள்ளார். தாமாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த மீனவர்களின் பிரதிநிதிகளை கருணாநிதி தனது அலுவலகத்துக்கு அழைத்துப் பேசி அவர்களுக்காக "இரத்தக்கண்ணீர்' வடித்தார். அவர்களின் அமைதிப் போராட்டத்தைத் திரும்பப்பெற்றுள்ளார் என்று கேட்பதற்காக அவர்களை அழைத்துப் பேசிய கருணாநிதி தானே பின்பு அடையாள உண்ணாவிரதப் போராட்டம் எனும் நாடகத்தை அரங்கேற்றினார். கருணாநிதி அச்சந்தர்ப்பத்தில் ஒரு விலாவாரியான உரையினையும் நிகழ்த்தினார். வழக்கம் போலவே சில சுவாரஸ்யமான விடயங்களையும் குறிப்பிட்டிருந்தார். "கச்சதீவு எமக்குத் திரும்ப வேண்டும் என்று சொல்கின்ற அளவுக்கு' போராட்டம் தொடர்ந்து செல்லும் என கருணாநிதி குறிப்பிட்டார். அடுத்து அவர் எமது எதிர்ப்புணர்வை பொருட்படுத்தாமல் இலங்கை அரசு நடந்து கொள்வதும் அதைத் தட்டிக் கேட்க வேண்டுமென்று நாம் மத்திய அரசிடத்தில் முறையீடு செய்வதும் வழக்கமான ஒன்றாக நமக்கும் பழக்கப்பட்டுப் போன ஒன்றாக கேட்டுக் கேட்டு மத்திய அரசுக்கும் பழக்கப்பட்டுப் போன ஒன்றாக ஆகிவிட்ட சூழ்நிலையில் தான் நாம் இங்கு கூடியிருக்கின்றோம் எனக் குறிப்பிட்ட போது அது ஒரு வகையில் தமிழக அரசின் கையாலாகாத்தனத்தை இந்திய மத்திய அரசின் மெத்தனப் போக்கினையுமே காட்டுகிறது எனலாம். இந்த நிலையில் இலங்கையில் தமிழர் 25 வருடகாலமாக தரை, கடல், ஆகாய மார்க்கமாகத் தாக்கப்பட்டுக் கொன்று குவிக்கப்பட்டு வரும் நிலையில் முதல்வர் கருணாநிதி கைகொடுப்பார் அல்லது இந்திய மத்திய அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் என நம்பியிருப்பது அர்த்தமற்றதாகும். இந்தியாவில் இடதுசாரி சக்திகள் பலமாய் இருக்கின்றன. இலங்கையிலும் ஏனைய "சார்க்' பிராந்தியத்திலும் இடதுசாரி கட்சிகளும் முற்போக்கு அமைப்புகளும் இந்திய இடதுசாரிக் கட்சிகளோடு இணைந்து இடதுசாரி சார்க் என்றொரு மாற்றீடான அமைப்பை உருவாக்குவது தான் காலத்தின் தேவையாகும். இன்று குறிப்பாக லத்தீன் அமெரிக்கப் பிராந்தியத்தில் இடதுசாரி சக்திகள் பலம் பெற்று வருவதை வெனிசுலா, பிரேசில், பொலிவியா போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் எடுத்துக் காட்டுகின்றன என்பதை குறிப்பாக 3 ஆவது உலக நாட்டு மக்கள் கண்டு கொள்ள வேண்டும்.

Email this page Your Opinion Print this page
டில்லிகொழும்பு அந்நியோன்யத்தில் நெருடலை ஏற்படுத்தியிருக்கும் பொருளாதார பங்குடைமை ஒப்பந்தம்
பிறப்புச் சான்றிதழ் இன்றி அவதியுறும் மலையக மக்கள்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com