Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, July 23, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Editorial
80 ஜூலை வேலைநிறுத்தக்காரர்கள் மீதான அரசின் அக்கறை?
[23 - July - 2008] [Font Size - A - A - A]
1980 ஜூலை பொதுவேலை நிறுத்தத்தின் போது அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட அரசாங்க சேவை ஊழியர்களில் சுமார் 40 ஆயிரம் பேருக்கு பல்வேறு நிவாரணங்களை வழங்குவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை கடந்தவாரம் அங்கீகாரம் அளித்திருக்கிறது. 1980 ஜூலை வேலைநிறுத்தக்காரர்கள் ஒருங்கிணைப்புச் சங்கம் வேலை இழந்தவர்கள் பற்றிய முழுமையான விபரங்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. அந்தவிபரங்கள் கிடைக்கப் பெற்றதும் அவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது என்று பொறியியல் சேவைகள், நிருமாணத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருக்கிறார். வேலை இழந்த ஒவ்வொருவருக்கும் காணி வழங்குதல், அவர்களின் பிள்ளைகளுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் காப்புறுதித்திட்டம் போன்றவை உத்தேச நிவாரண நடவடிக்கைகளில் அடங்குவதாகத் தெரியவந்திருக்கிறது.

"300 ரூபா சம்பள அதிகரிப்பும் வாழ்க்கைச் செலவுப்புள்ளியொன்றுக்கு 5 ரூபா கொடுப்பனவும் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து 17 தொழிற்சங்கங்கள் 1980 ஜூலையில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கின. ஆனால், ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) தொழிற்சங்கங்கள் உட்பட 6 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தக்காரர்களுக்கு துரோகம் இழைத்தன. அந்த வேலைநிறுத்தத்தின் விளைவாக சுமார் 80 ஆயிரம் ஊழியர்களை அன்றைய ஐ.தே.க.அரசாங்கம் பதவி நீக்கம் செய்தது. அந்த வேலைநிறுத்தம் முறியடிக்கப்பட்டமைக்கு ஜே.வி.பி.யின் தலைவர்களே பொறுப்பு. ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அரசாங்கம் வேலைநிறுத்தக்காரர்களை மயானங்களை நோக்கி விரட்டியது. அத்தகைய துரோகத்தைச் செய்த ஜே.வி.பி.யினர் இன்று ஐ.தே.க.வுடன் சேர்ந்து திடீர் வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபடுகிறது' என்று அமைச்சர் சேனாரத்ன குற்றஞ்சாட்டியிருக்கிறார். இருவாரங்களுக்கு முன்னர் ஜே.வி.பி. தலைமையிலான தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் மேற்கொண்ட பொது வேலைநிறுத்தம் தோல்வியில் முடிவடைந்ததாகக் குறிப்பிட்டிருக்கும் அமைச்சர், சோசலிச இயக்கமாகத் தங்களைக் காட்டிக் கொண்டு பிற்போக்குத்தனமான ஐ.தே.க.வுடன் அணிசேர முயற்சிக்கின்ற ஜே.வி.பி.யினரை இலங்கை தொழிலாளர் வர்க்கம் இனிமேல் ஒருபோதுமே நம்பப் போவதில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

தங்களது வாழ்வின் அந்திமக் காலத்துக்கு வந்துவிட்ட 1980 ஜூலை வேலைநிறுத்தக்காரர்கள் எதுர்நோக்குகின்ற கஷ்டநிலை குறித்து ஜனாதிபதி ராஜபக்ஷவின் கவனத்துக்கு தன்னால் கொண்டு வரப்பட்டதையடுத்து உடனடியாகவே நிவாரண நடவடிக்கைகள் தொடர்பான யோசனைகளை அவர் அமைச்சரவைக்குச் சமர்ப்பித்து அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதாகவும் அமைச்சர் சேனாரத்ன கூறியிருக்கிறார். 1980 ஜூலை வேலைநிறுத்தத்தின் போது பதவி நீக்கப்பட்ட அரசாங்க ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ள உத்தேசித்திருக்கும் நிவாரண நடவடிக்கைகளை யாருமே ஆட்சேபிக்கப்போவதில்லை. அது வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கைதான். ஆனால் 28 வருடங்கள் கழித்து அவர்கள் மீது இப்போது அரசாங்கத்துக்கு திடீர்ப்பாசம் பிறந்த காரணம்தான் என்ன என்று கேட்காமலிருக்க எம்மால் முடியவில்லை. அந்த பொதுவேலை நிறுத்தத்தின் போது பதவி நீக்கம் செய்யப்பட்டவர்களில் பலர் தற்கொலை செய்து கொண்டனர். கணிசமான எண்ணிக்கையானவர்கள் வாழ்க்கையை ஓட்டுவதற்கு பிச்சையெடுக்கும் நிலைக்குக் கூடத் தள்ளப்பட்டார்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 1994 ஆம் ஆண்டில் இருந்து பதவியில் இருக்கிறது. ஏதோ அக்கட்சி இப்போதுதான் அதிகாரத்துக்கு வந்திருப்பது போலவும் வேலை நிறுத்தக்காரர்களின் நலன்களில் அக்கறை கொண்டிருப்பது போலவும் காட்டிக் கொள்வற்கு ஜனாதிபதியும் அவரது அரசாங்க அமைச்சர்களும் முயற்சிக்கிறார்கள். வயோதிபர்களாகிப் போன 1980 ஜூலை வேலைநிறுத்தக்காரர்களின் குடும்பங்கள் மீது இவ்வளவு காலமும் ஏன் இவர்களுக்கு அக்கறை பிறக்கவில்லை.

இருவாரங்களுக்கு முன்னர் ஜே.வி.பி. தலைமையிலான தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தப் போராட்டம் தோல்வியில் முடிந்துவிட்டதாக அரசாங்கத்தரப்பினர் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கின்ற போதிலும் தொழிலாளர் வர்க்கத்தினர் தங்களுக்கு ஆதரவாக இருப்பதாக அவர்கள் மார்தட்டுகின்ற போதிலும் உண்மை நிலைவரம் அவர்களுக்கு புரியாததல்ல. இந்நாட்டுத் தொழிலாளர் வர்க்கத்தினர் முன்னென்றுமில்லாத பொருளாதாரச் சுமையின் காரணமாகத் திணறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக பல்வேறு பிரசாரங்களை முன்னெடுத்திருக்கும் அரசாங்கத் தரப்பினர் தற்போது அல்லற்பட்டுக்கொண்டிருக்கும் ஊழியர்களின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய நிவாரண நடவடிக்கைகளில் கவனத்தைச் செலுத்துவதை விடுத்து 28 வருடங்களுக்கு முன்னர் பதவியிழந்தவர்களைப் பற்றி பேசுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஜே.வி.பி.யின் தொழிற்சங்கங்கள் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டங்களில் குதிக்கப் போவது பற்றி பேசப்படுகின்ற இன்றைய கட்டத்தில் ஜே.வி.பி.யினருக்கு எதிரான பிரசாரங்களை முடுக்கி விடும் ஒருதந்திரோபாயமாகவே 1980 ஜூலைவேலைநிறுத்தக்காரர்கள் பற்றி அரசாங்கம் அக்கறை காட்டுவதாக சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. மானசீகமான நோக்கம் இருப்பதாக நம்புவது கஷ்டமாகவிருக்கிறது.

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com