அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா தனது வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின் இரண்டாம் கட்டமாக ஈராக்கை வந்தடைந்துள்ளார்.
இவர் இங்கு அமெரிக்க அதிகாரிகள், இராணுவ தளபதிகள் மற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகளுடன் சந்திப்புக்களை நடத்தவுள்ளார்.
தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், 16 மாதங்களுக்குள் ஈராக்கிலுள்ள அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படுமென ஒபாமா முன்னர் தெரிவித்திருந்தார்.
ஆனால், படைகளை வாபஸ் பெறுவதற்கு பின்னால், ஈராக்கிய படைகளுக்கு பயிற்சியளித்தல், அங்கு எஞ்சியுள்ள அல்ஹைடா போராளிகளின் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருதல் போன்ற பாரிய பணிகள் இருப்பதால் தனது திட்டங்களில் நெகிழ்வுப் போக்கை கடைப்பிடிப்பதற்கு தான் தயாராகி வருவதாக ஒபாமா தற்போது தெரிவித்துள்ளார்.
தனது வெளிநாட்டுக் கொள்கை தொடர்பிலும், நாட்டின் பாதுகாப்பு தொடர்பிலும் அமெரிக்கர்கள் மத்தியில் நம்பகத்தன்மையை கட்டியெழுப்பும் முயற்சியாக ஒபாமா மோதல்கள் அதிகம் இடம்பெறும் நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டு வருகின்றார்.
இவ்விஜயத்தில் ஒபாமாவுடன் இணைந்துள்ள செனட்டர்களான ஜக் றீட் மற்றும் சுக் ஹகெல் ஆகியோர் கொண்ட குழு ஈராக்கிய பிரதமர் நூரி அல் மாலகி, ஜனாதிபதி ஜவால் தலபானி, ஈராக்கிலுள்ள அமெரிக்க இராணுவத் தளபதி ஜெனரல் டேவிட் பெட்ரவுஸ் மற்றும் ஏனைய அமெரிக்க அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.