* இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் கோர்டன் பிறவுண்
ஈரான் அணுவாயுத நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்வதை தடுப்பதற்கு பிரிட்டன் தீர்மானித்துள்ளதாக பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிறவுண் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்த பிறவுண் உலக வரைபடத்திலிருந்து இஸ்ரேலை அகற்றுவதற்கு ஈரானிய ஜனாதிபதி மஹ்மூட் அஹமதி நிஜாத் விடுத்துள்ள அழைப்பு வெறுப்பூட்டுவதாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் அணு நிகழ்ச்சித் திட்டத்தை ஈரான் கைவிட வேண்டும் அல்லது மேலதிக தனிமைப்படுத்தல்களை எதிர்கொள்ள நேரிடுமென எச்சரித்துள்ள பிறவுண் ஈரானுக்கெதிராக உறுதியான தடைகளை விதிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு பிரிட்டன் முன்னிலை வகிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் இஸ்ரேலின் உரிமைக்கான போருக்கு பிரிட்டன் பக்க பலமாக இருக்குமெனவும் தெரிவித்துள்ளார்.
பிறவுணின் மத்திய கிழக்கிற்கான மூன்று நாள் விஜயத்தின் முடிவாக இவ் உரை அமைந்துள்ளதுடன், இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் பிரிட்டிஷ் பிரதமரொருவர் முதன் முறையாக ஆற்றிய உரை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர் இங்கு உரையாற்றுகையில்;
அணுவாயுதமொன்றை ஈரான் பெற்றுக் கொள்வதை தடை செய்வதற்கு அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன தீர்மானித்துள்ளன. கடந்த 2000 வருடங்களுக்கு மேலாக போர், பயங்கரவாதம், வன்முறை, பாரபட்சம் மற்றும் பாதுகாப்பில்லாத் தன்மை போன்றவற்றையே எதிர்கொண்டுள்ளது. இஸ்ரேலுக்குள்ள உரிமை, அந்நாட்டு மக்களுக்கான அச்சுறுத்தல் தொடர்பில் சிலர் கேள்வியெழுப்புகின்றனர். இஸ்ரேல் மக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்குரிய உரிமையைக் கொண்டிருக்கிறார்கள் என நாம் கூறுகிறோம். அணுவாயுத நடவடிக்கைகளை இடைநிறுத்தி பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு ஈரானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை அது நிராகரித்தால் உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் அது தனிமைப்படுத்தப்படுவதுடன், மேலதிக தடைகளையும் எதிர்கொள்ள நேரிடும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது தந்தை வாழ்நாள் முழுவதும் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்தவாறும் குறிப்பிட்ட பிறவுண் தனது வாழ்க்கை முழுவதும் தனிப்பட்ட ரீதியில் இஸ்ரேலின் நண்பனாக இருப்பாரெனவும் உறுதியளித்துள்ளார்.