* முதலமைச்சர் அத்துல விஜேசிங்க
கல்வி நிலையில் இரண்டாம் இடத்தில் உள்ள வடமேல் மாகாணத்தின் கல்வித்தரம் 2010ஆம் ஆண்டுக்குள் முதலாம் இடத்துக்குக் கொண்டுவரப்படவேண்டும் என்ற முயற்சியை எடுத்துவருவதாக வடமேல் மாகாண முதலமைச்சர் அத்துல விஜேசிங்க தெரிவித்தார்.
புத்தளம் வலயத்திற்குட்பட்ட தமிழ், சிங்கள மொழி மூலமான 272 தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
புத்தளம் புனித அன்?ஸ் மத்திய கல்லூரியில் நடைபெற்ற இவ்வைபவத்தில் முதலமைச்சர் அத்துல விஜேசிங்க தொடர்ந்து பேசுகையில்;
""நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த ஆசிரியர் உதவியாளர் நியமனம் இன்று வழங்கப்படுவது குறித்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன். ஏனெனில், இந்த வகையிலான நியமனம் இதுவே கடைசியாக இருக்கும் என்று கருதப்படுகின்றது. தவிர இனிவரும் ஆசிரியர் நியமனங்கள் பட்டதாரிகளுக்கே வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு கொள்கை அளவில் தீர்மானித்துள்ளது.
சுமார் 756 தமிழ், சிங்கள மொழி மூல ஆசிரியர் உதவியாளர்களுக்கு நாம் நியமனம் வழங்கியுள்ளோம். இது ஒரு பெருமைக்குரிய விடயமாகும்.
வட மாகாணத்தில் இருந்து வந்து இங்கு தொண்டர் ஆசிரியர்களாக சேர்ந்து பணியாற்றிய கணிசமானவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர்கள் நியமனங்கள் வழங்கப்பட்டு, எமது வலயத்தில் கடமையாற்ற ஒழுங்குகள் செய்யப்பட்டன.
அப்படியாயின் எமது வலயத்தில் தொண்டர் ஆசிரியர்களாக நீண்டகாலம் பணியாற்றுகின்ற இளைஞர், யுவதிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்த சமயத்தில் வட மாகாணத்தில் இருந்து வந்துள்ளவர்கள் ஆசிரியர் உதவியாளர்கள் எமது மாகாணசபைக்குரிய பாடசாலைகளில் கடமையாற்றுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்ற தகவலை சகல பாடசாலைகளுக்கும் அறிவித்தோம்.
இது குறித்து கல்வி அமைச்சர் என்னுடன் தொடர்புகொண்டபோது வடக்கு, கிழக்கு மாகாணச் செயலாளர், வடமேல் மாகாணத்தில் ஆசிரியர் உதவியாளர்களை நியமிப்பதற்கு அதிகாரத்தை கொடுத்திருப்பாராயின் எமக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த ஆசிரியர் உதவியாளர்களை நியமிப்பதற்கு அதிகாரம் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். அவ்வாறு இல்லையெனில் எமது கல்வி வலயத்தில் பணியாற்றுகின்ற சகலருக்கும் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தேன்.
இந்த ஆசிரியர் உதவியாளர்கள் நியமிப்பதில் ஜனாதிபதி அமைச்சரவை மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த ஆகியோரின் ஒத்துழைப்பும் கிடைத்தது. நாம் இவர்களுக்கு நன்றி கூறவேண்டும்.
கால்நடை அபிவிருத்தி பிரதியமைச்சர் கே.ஏ.பாயிஸ் மாகாணசபை உறுப்பினர்களான எஸ்.ஏ.எஹியா மற்றும் என்.ரீ.எம்.தாஹீர் ஆகியோருடன் நானும் கல்வி அமைச்சரைச் சந்தித்து கலந்துரையாடினோம். ஆசிரியர் நியமனத்திற்கான அனுமதியைப் பெற்றோம். இது எமக்குக் கிடைத்த வெற்றியாகும்.
ஆசிரியர் பதவி சமூகத்திற்கு தொண்டாற்றுகின்ற பதவியாகும். எனவே, அதனை பெற்றுள்ள ஆசிரியர் உதவியாளர்கள் மனித நேயம் மிகுந்தவர்களாக தம்மிடம் ஒப்படைக்கப்படும் மாணவச் செல்வங்களுக்கு நல்ல கல்வியையும் ஒழுக்கத்தையும் சிறந்த பண்பாட்டையும் ஊட்டி உருவாக்க ஒத்துழைக்க வேண்டும்' என்றார்.
சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்ட கால்நடை அபிவிருத்தி பிரதியமைச்சர் கே.ஏ.பாயிஸ் பேசுகையில்;
பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்படும் மாணவர்களில் 5 சதவீதம் கூட புத்தளம் பிரதேசத்தில் இருந்து தெரிவுசெய்யப்படுவதில்லை. அது தவிர மருத்துவ விஞ்ஞானப் பட்டதாரிகளின் தொகையும் மிக மிக குறைவாகவே உள்ளது. இதனைக் கொண்டு புத்தளம் பிரதேசத்தின் கல்வித்தர வீழ்ச்சியை ஓரளவு சுட்டிக்காட்ட முடியும்.
நாம் அண்மையில் கல்வி அமைச்சருடன் எமது கல்விப் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடினோம். அவ்வாறே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருடனும் உரையாடினோம். வயம்ப பல்கலைக்கழக பிரிவு ஒன்றையும் ஆசிரியர் கல்வி பிரிவு ஒன்றையும் திறந்த பல்கலைக்கழகப் பிரிவு ஒன்றையும் புத்தளத்தில் அமைக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன' என்றார்.
இவ்வைபவத்தில் அமைச்சர் மில்றோய் பெர்னாண்டோ வடமேல் மாகாண அமைச்சர் பீ.விக்டர் அன்டனி பெரேரா உட்படப் பலர் கலந்துகொண்டனர்.