தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் "கமநெகும' திட்டத்தின் கீழ் 32 இலட்சம் ரூபா செலவில் பாண்டிருப்பு கிராமத்தில் விளையாட்டு மைதானத்தின் தடுப்புச் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு வைபவம் அண்மையில் நடைபெற்றதுடன், அடிக்கல்லினை கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலாளர் வே.ஜெகதீஸன் நாட்டி வைத்தார். இவ்வைபவத்திற்கு பாண்டிருப்பு திரௌபதையம்மன் ஆலய தலைவர் ஞா.இராஜேந்திரம், முன்னாள் தலைவர் அ.பேரின்பராஜா, கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் பா.கோகுலராஜன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இவ்விளையாட்டு மைதானத்திற்கு தேவையான மூன்று ஏக்கர் காணியினை பாண்டிருப்பு திரௌபதையம்மன் ஆலயமும் பொது மக்களும் வழங்கியிருந்தனர்.
இம்மைதானத்தினை அமைக்க பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திரநேரு சந்திரகாந்தன், கனகசபை பத்மநாதன் ஆகியோரும் தமது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு நிதியிலிருந்து ஒரு தொகை நிதியினை வழங்கியிருந்தனர்.
நீண்ட காலத் தேவையாகவிருந்த இவ்விளையாட்டு மைதானத்தினை அமைக்க பாண்டிருப்பு சமூக அபிவிருத்தி அமைப்பு மேற்கொண்ட முயற்சி பலனளித்துள்ளதாக அதன் தலைவர் கு.இராஜேஸ்வரன் தெரிவித்தார்.
கமநெகும திட்டத்தின் கீழ் பாண்டிருப்பு 1 பகுதியிலுள்ள நான்கு கிராம சேவையாளர் பிரிவிற்கும் ஒதுக்கப்பட்ட நிதியினைக் கொண்டு இவ்வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.