* அரசியல் நெருக்கடி நீண்டு செல்லும் அறிகுறி
நேபாள ஜனாதிபதித் தேர்தலில் தமது வேட்பாளரை அரசியலமைப்பு நிர்ணயசபை உறுப்பினர்கள் நிராகரித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கும் அந்நாட்டில் மாவோயிஸ்ட்டுகள் தாங்கள் புதிய அரசாங்கத்தை அமைக்கப் போவதில்லையென நேற்று செவ்வாய்க்கிழமை தீர்மானித்துள்ளனர்.
இப்போது நாங்கள் அரசாங்கத்தை அமைக்க மாட்டோம் என்று மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா நேற்று நிருபர்களுக்குத் தெரிவித்தார்.
நேபாளத்தின் முதல் ஜனாதிபதியைத் தேர்வு செய்யும் வாக்கெடுப்பு திங்கட்கிழமை அரசியலமைப்பு நிர்ணய சபையில் இடம்பெற்றது. ஆனால், மாவோயிஸ்ட்டுகளின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. நேபாள காங்கிரஸின் வேட்பாளரும் இந்திய வம்சாவளியினருமான மாதோனி இனத்தைச் சேர்ந்த ராம்பரன் யாதவ் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
முடியாட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து முடியாட்சியை பிரகடனப்படுத்தியமை மற்றும் சமாதான நடவடிக்கைகள் போன்ற ஏற்பாடுகளில் ஜனாதிபதித் தேர்தலானது முக்கியமான முதலாவது தீர்மானம் எடுக்கும் விடயமாக அமைந்துள்ளது. இந்நிலையில் அரசியல் நிர்ணய சபையில் அதிக எண்ணிக்கையான ஆசனங்களைப் பெற்ற மாவோயிஸ்ட்டுகள் அரசாங்கத்தை அமைக்கப் போவதில்லையென தெரிவித்திருப்பது அரசியல் நெருக்கடி நிலையை மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. மாவோயிஸ்ட்டுகள் அரசமைத்தால் புதிய பிரதமராக பிரசண்டா பதவியேற்பாரெனவும் புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படும் வரை அடுத்த இரு வருடங்களுக்கு மாவோயிஸ்ட்டுகளே ஆட்சியிலிருப்பார்களெனவும் எதிர்பார்க்கப்பட்டது.