எம்.ஏ.எம்.நிலாம்
சம்பள உயர்வு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து அடுத்த கட்ட வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி முழு அளவிலான ஆதரவை வழங்குமெனத் தெரிவித்திருக்கும் அதேவேளை, மூன்று நாள் பொது வேலைநிறுத்தம் தொடர்பாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் ஐ.தே.க. தொழிற்சங்கங்கள் அதில் பங்கேற்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆம் திகதிய வேலைநிறுத்தத்திற்கு ஐ.தே.க. பூரண ஒத்துழைப்பை வழங்கியது. அந்த வேலைநிறுத்தத்தை அரச தரப்பினர் சீர்குலைக்கும் முயற்சிகளை மேற்கொண்டதோடு அது தோல்வி கண்டதாக சித்திரித்துக் காட்டியது. ஆனால், அவ்வேலை நிறுத்தம் அரசுக்கு பெரும் அழுத்தத்தைக் கொடுத்தமையே உண்மையானதாகும். அதன் பின்னரே அரசு சம்பள உயர்வு குறித்து சிந்திக்கத் தொடங்கியது.
வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு ஏற்ப சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் அடுத்த கட்டமாக மூன்று நாள் பொது வேலைநிறுத்தத்துக்கு தயாராகி வருகின்றது. இதற்கும் எதுவித தயக்கமுமின்றி ஐ.தே.க ஆதரவளிக்கும்.
தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் தடையாக இருக்கமாட்டாது. இதில் நாம் கட்சி, அரசியல் பேதம் பார்க்கப்போவதில்லை. தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் அழைப்பு விடுத்தால் எமது தொழிற்சங்கம் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதோடு வேலை நிறுத்தத்துக்கு முழு அளவில் ஆதரவளிக்கும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.