எம்.ஏ.எம்.நிலாம்
நாட்டிலுள்ள சகல மத வழிபாட்டுத் தலங்களுக்கும் மின்கட்டணச் சலுகை வழங்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மின்சக்தி அமைச்சர் ஜோன் செனவிரத்னவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
சர்வசமயத் தலைவர்களுடனான சந்திப்பொன்று நேற்று செவ்வாய்க்கிழமை அலரிமாளிகையில் நடைபெற்ற போதே ஜனாதிபதி இந்தப் பணிப்புரையை விடுத்தார்.
இதன்படி ஜூலை முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரக்கூடிய விதத்தில் அனைத்து மதவழிபாட்டுத் தலங்களுக்குமான மின்கட்டண அறவீட்டின் போது 181 அலகுகளுக்கு மேற்பட்ட மொத்த அலகுகளுக்கு 12 ரூபா 50 சதம் அறவிடத் தீர்மானிக்கப்பட்டது. மேலும் 5 ஆயிரம் அலகுகளுக்கு குறைவாக மின் பாவிக்கும் வழிபாட்டுத் தலங்களுக்கு விசேட சலுகை பெற்றுக் கொடுக்கவும் இணக்கம் காணப்பட்டது.
குறைந்தளவு மின் பாவிக்கும் மத வழிபாட்டுத் தலங்களுக்கு 90 அலகு என்ற கட்டுப்பாட்டை 120 அலகாக அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த நடவடிக்கைகள் மூலம் மதவழிபாட்டுத் தலங்களின் மின்கட்டணம் 50 சதவீதமாக குறைய வழி ஏற்பட்டுள்ளது.
அத்துடன் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் இலவசமாக சி.எப்.எல்.மின் குமிழ்களைப் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சர்வமதத் தலைவர்கள் சந்திப்பில் வெலமிட்டியவ குசலதம்மதேரோ, கொட்டுக்கொட தம்ம?வச தேரோ, பெல்லன் வில விமலரத்னதேரோ, இத்தாபான தம்மலங்கார தேரோ ஆகிய பௌத்த மகாசங்கத்தினரும், மௌலவி நியாஸ் முஹமத் உட்பட இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத்தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.