* கூட்டுத்தாபன தலைவர் நேரில் சென்று பார்வை
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை அடுத்துவரும் ஓரிரு மாதங்களுக்குள் இயங்க வைக்கப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் அமைச்சரவை மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக லங்கா சீமெந்துக் கூட்டுத்தாபனத் தலைவர் எஸ்.ஜே.பரணகம தெரிவித்தார்.
காங்கேசன்துறையிலுள்ள சீமெந்துத் தொழிற்சாலையை மீள இயங்கவைப்பதற்கு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகப் பார்வையிடுவதற்காக லங்கா சிமெந்துக் கூட்டுத்தாபனத் தலைவர் எஸ்.ஜே.பரணகம நேற்று செவ்வாய்க்கிழமை காங்கேசன்துறைக்கு வருகை தந்தார்.
சீமெந்து தொழிற்சாலையை பார்வையிட்ட பின்னர் யாழ்ப்பாணம் இணுவிலில் அமைந்துள்ள கட்டிடமொன்றில் தற்காலிகமாக இயங்கும் லங்கா சீமெந்துக் கூட்டுத்தாபன அலுவகத்தில் யாழ்ப்பாண ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் மேலும் கருத்துத் தெரிவித்த பரணகம காங்கேசன்துறையிலுள்ள லங்கா சீமெந்துத் தொழிற்சாலையை மீள இயக்குவற்கு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென்பதைப் பார்வையிடுவதற்காகவே யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தேன்.
இங்கு பார்வையிட்ட விடயங்களை கொழும்பிலுள்ள அமைச்சர்களுக்குத் தெரியப்படுத்தி தீர்மானங்களை எடுப்பதன் மூலம் அடுத்துவரும் ஓரிரு மாதங்களுக்குள் இந்தத் தொழிற்சாலையை மீள இயங்க வைப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்த வேலைத்திட்டம் முதலில் சிறியளவாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். இங்குள்ள இயந்திரங்களுள் நல்லதாக இருப்பதை எடுத்துக் கொண்டு ஏனையவற்றைப் புதிதாகக் கொள்வனவு செய்யவேண்டியுள்ளது.
குழந்தையொன்று பிறந்தவுடன் வளர்ச்சியடைய முடியாது. நான் தலைமைப் பொறுப்பை ஏற்று ஐந்து மாதங்களேயாகின்றன. இந்த நிறுவனத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வந்து இதற்குச் சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதே எமது நோக்கமாகும்.
தற்போது இதனை இயக்குவதற்குரிய பணவசதி எம்மிடம் இல்லை. ஆகையால் இந்திய நிறுவனமொன்றுடன் இணைந்து கூட்டு முயற்சியாகவே இது இயக்கப்படவுள்ளது. வேறு பல வெளிநாட்டு நிறுவனங்களும் இதனை இயக்குவதற்கான கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. இது தொடர்பாகவும் நாம் ஆராய்வோம்.
எந்த நிறுவனம் இதனை இயக்கினாலும் லங்கா சீமெந்துக் கூட்டுத்தாபனத்தின் கீழேயே இது செயற்படும். விலை உட்பட அனைத்து விடயங்களையும் லங்கா சீமெந்துக் கூட்டுத்தாபனமே தீர்மானிக்கும். இதன் மூலம் யாழ்ப்பாண மக்களுக்கு சாதாரண விலைக்குச் சிமெந்தினை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனை இயக்குவதன் மூலம் யாழ்ப்பாண இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். இதனால் வருகின்ற இலாபம் சுகாதார மேம்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.