நவாலி சென் பீற்றஸ் தேவாலயத்துக்கு அருகிலுள்ள வீடொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பிச் செல்ல முயன்ற கொள்ளையர் குழுமீது இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குருநகர்மத்திய கிழக்கு வீதியைச் சேர்ந்த இராமச்சந்திரன் ஜீவிதன் (வயது 19) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவராவார்.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது;
நவாலி பிரசாத் வீதி (வை.எம்.சி.ஏ.வீதி) யிலுள்ள வீடொன்றுக்கு நேற்று அதிகாலை 12.15 மணியளவில் சென்ற சுமார் 10 பேரடங்கிய கொள்ளையர்கள் அவ்வீட்டுப் பெண்ணான ஞானசிகாமணிசிறிபத்மலோஜினி (வயது50) என்பவரை வாளால் வெட்டி காயப்படுத்திவிட்டு நகை மற்றும் பணம் ஆகியவற்றை திருடி எடுத்து அட்டகாசம் புரிந்துள்ளனர்.
இவ்வேளை, அயல்வீட்டிலுள்ள தொலைபேசி ஒன்றின் மூலம் இராணுவத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டதையறிந்த கொள்ளையர்கள் தாம் திருடிய பொருட்களுடன் வெவ்வேறு திசைகளில் சிதறியோடினர்.
இவ்வாறு ஓடிய நபர்களில் ஒருவரான ஜீவிதன் என்பவர் மானிப்பாய் லோட்டஸ் வீதியில் வேலங்கைப் பிள்ளையார் ஆலயத்தின் பின்புறத்தில் வைத்து தகவல் வழங்கப்பட்ட திசையை நோக்கி வந்துகொண்டிருந்த இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சுட்டுக்கொல்லப்பட்ட நபரின் சட்டைப்பையில் மேற்படி வீட்டில் திருடப்பட்டதெனக் கருத்தப்படும் ஒருசோடித் தங்கக் காப்பு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற மல்லாகம் மாவட்ட நீதிபதி திருமதி சரோஜினி இளங்கோபன் மரணவிசாரணைகளை மேற்கொண்டபின் சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இதேவேளை காயமடைந்த சிறிபத்ம லோனினி யாழ்.போதனா வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.