இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவினர் நேற்று செவ்வாய்க்கிழமை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
கொழும்பில் நேற்று மாலை 6.30 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை நடைபெற்ற இந்த விசேட சந்திப்பின் போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற பிரதிநிதிகள் அடங்கிய குழுவினருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன், செல்வி.ந.தங்கேஸ்வரி, இமாம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போதைய அரசியல் நெருக்கடி நிலைமைகள் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் அரசபயங்கரவாதத்தின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் தொடர்பாக வலியுறுத்திக் கூறியுள்ளனர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பையேற்றதற்கு பின்னரான காலப்பகுதியில் குறிப்பாக இன்றுவரை நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் தலைநகர் கொழும்பில் கடத்தப்பட்டு கப்பம் பெறப்பட்ட நிலையிலும் காணாமல் போயுள்ளனர்.
மேலும் பலர் படுகொலை செய்யப்பட்டு அடையாளம் காணப்படமுடியாத நிலைமையில் அழிக்கப்பட்டுள்ளார்கள். இன்னும் நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள், யுவதிகள் பல தடுப்பு முகாம்களில் எந்தவொரு விசாரணைகளுமின்றி மாதக்கணக்கில், வருடக்கணக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
இதனை விட வடக்கு, கிழக்கு தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று மக்கள் பிரதிநிதிகள் அரசின் அதிஉயர் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதுவரை அது தொடர்பான எந்தவொரு நீதியான விசாரணைகளும் இடம்பெறவில்லை.
தமிழ்மக்களின் தாயகப் பிரதேசமான வடக்கும் கிழக்கும் சட்டத்தின் துணை கொண்டு இரண்டாக பிளவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது மக்களிடமிருந்த இறுதி நம்பிக்கையையும் இல்லாமல் செய்துவிட்டது.
ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவின் இன்றைய அரசாங்கம் யுத்த நிகழ்ச்சி நிரலையே தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது. போரின் மனித அவலங்களை கேளிக்கையாக கொண்டாடுகின்றது.
கிழக்கில் ஆயுதக் குழுவொன்றின் துணையுடன் மோசடியான தேர்தல் ஒன்றை அரசாங்கம் அரங்கேற்றியுள்ளது, இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முற்றாக நிராகரிக்கின்றது.
இலங்கையின் இன நெருக்கடிக்கு நீதியானதும் அமைதியானதுமான தீர்வொன்று காணப்பட வேண்டுமெனில் அதற்கு சர்வதேசத்தின் பங்களிப்பே அவசியமானதொன்றாகும். அதனை ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு முன்னெடுக்க வேண்டுமென்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்திக் கோரியுள்ளது.