* ஈ.பி.டி.பி. அறிக்கை
கிழக்கு மாகாணத்தில் எமது கட்சியின் அரசியல் செயற்பாடுகளை முடக்கும் தீயநோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி.) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஈ.பி.டி.பி. விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
செங்கலடியில் எமது உறுப்பினர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சந்தேகத்தின் பேரில் சிலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகளின் முடிவிலேயே உண்மைகள் தெரியவரும். எனவே, நீதிமன்ற விசாரணையில் இருக்கும் விடயம் தொடர்பில் நாளுக்கு நாள் பொறுப்பற்ற செய்திகளைக் கூறும் தீய சக்திகளின் கபட நோக்கத்தை எமது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அவர்களின் நோக்கம் எம்மை எமது மக்களிடமிருந்து பிரிப்பதேயன்றி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நியாயமான விசாரணைகள் நடக்கவேண்டும் என்பதல்ல.
எமது கட்சி உறுப்பினர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அதற்கான தண்டனையை சட்ட ஒழுங்குக்கு அமைய ஏற்றுக்கொள்வதில் நாம் ஆயத்தமாகவே இருக்கிறோம். எவரொருவர் கொலை செய்யப்படுவதையும் எவரொருவர் மிரட்டப்படுவதையும் நாம் கண்டிக்கின்றோம். பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் அத்தகைய செயற்பாடுகளை எவர் செய்தாலும் நாம் கண்டிக்கின்றோம்.
அத்தகைய செயற்பாடுகளில் எமது கட்சி உறுப்பினர்கள் ஈடுபட்டால் அதற்காக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தேவை ஏற்பட்டால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவும் நாம் பின்நிற்கப் போவதில்லை.
இதேவேளை, வாழைச்சேனையில் வைத்து எமது உறுப்பினரான காளியப்பன் குணசீலன் கடந்த 19.06.2008 அன்று கடத்தப்பட்டார். இது தொடர்பில் நாம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தோம்.
பின்னர் 27.06.2008 அன்று கடத்தப்பட்ட எமது உறுப்பினரின் சடலம் வெட்டுக்காயங்களுடன் புதை குழியிலிருந்து பேத்தாளை தாமரைக்கேணியில் கண்டெடுக்கப்பட்டது. எனினும், இதுவரை எமது முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் எவ்விதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. எனவே, எம் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்துவதில் சில பொலிஸ் அதிகாரிகளும் செயற்படுவதாகவே நாம் சந்தேகிக்கின்றோம்.
நாடளாவிய ரீதியில் எமது அலுவலகங்களுக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்குவது வழமையாகும். அதேபோல் செங்கலடி அலுவலகத்திற்குப் பொலிஸாரும் படையினரும் காவல் கடமையில் இருந்து வரும் நிலையில் எமது உறுப்பினர்களின் செயற்பாடுகள் அத்தனையும் அவர்கள் அறிந்ததாகவே இருந்துள்ளது. இந்நிலையில் எமது உறுப்பினர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தால் அதைப் பொலிஸார் அனுமதித்திருக்கவும் மாட்டார்கள்.
அப்படி ஒரு சம்பவம் குறித்து தமது மேலிடத்திற்கும் அறிவித்திருப்பர். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இதிலிருந்தே எமது கட்சி மீதான குற்றச்சாட்டுக்களுக்குப் பின்னணியில் தீய நோக்கம் உண்டு என்பது புலனாகிறது.
எமது பாவனையில் இருந்த வாகனங்களை விசாரணைக்குத் தந்துதவுமாறு பொலிஸார் எம்மிடம் கேட்டபோது நாம் சட்டம், ஒழுங்கை மதிப்பவர்கள் என்பதாலும் நாம் குற்றமற்றவர்கள் என்பதை உணர்த்துவதற்காகவும் நாமே எமது வாகனங்களை பொலிஸாரிடம் கையளித்தோம். எனினும், ஆட்கடத்தலில் தொடர்புபட்ட வாகனங்களை பறிமுதல் செய்ததாக தீய நோக்கில் செய்தி வெளியிடப்பட்டது.
அந்த வகையில் மட்டக்களப்பில் எமது உறுப்பினர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் எடுக்கப்பட்டிருக்கும் சட்ட நடவடிக்கைகளை நாம் மிக உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம்.
குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அந்த உறுப்பினர்கள் மீது கட்சி மட்டத்திலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். நாம் குற்றங்களை வரவேற்பவர்களுமல்ல குற்றங்கள் புரிபவர்களை மறைத்துப் பாதுகாப்பவர்களும் அல்லர். கடந்த காலங்களிலும் இவ்வறான சில குற்றச்சாட்டுகள் எம்மீது சுமத்தப்பட்ட போதும் அதை சட்ட ரீதியில் எதிர் கொண்டுள்ளோம். எனவே, விசாரணைகளை திசை திருப்பும் வகையில் வெளியிடப்படும் செய்திகளை நம்ப வேண்டாம் என நாம் மக்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.
கட்சியின் உறுப்பினர்களோ. கட்சியின் ஆதரவாளர்களோ யாராயினும் மக்கள் விரோத மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஈ.பி.டி.பி. ஒரு போதும் மன்னிக்காது. அது ஈ.பி.டி.பி.யின் ஒரு வழிமுறையும் அல்ல. அத்தகையவர்கள் மீது கட்சி மட்டத்திலும் சட்ட ஒழுங்குகளுக்கு அமையவும் கடுமையான நடவடிக்கை எடுக்க கட்சி பின் நிற்காது.