ஆடி அமாவாசை விரதம் இம்முறை ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதிவரும் அதேநேரம் சூரிய கிரகணமும் அன்று இருப்பதால் கிரகணதோஷம் காரணமாக மறுநாளே ஆடி அமாவாசை விரதம் அனுஷ்டிக்க வேண்டும் என திருக்கணித பஞ்சாங்க ஜோதிடர் சிவஸ்ரீ சி.சிதம்பரநாதக் குருக்கள் கூறியிருப்பது விவாதங்களை ஏற்படுத்தி வருகின்றது.
இதேவேளை, வாக்கிய பஞ்சாங்க வெளியீட்டாளர்கள் இதுவிடயத்தில் எந்தவித கருத்தையும் தெரிவிக்காத போதும் இப்பஞ்சாங்கத்தை அனுசரிக்கும் அமைப்புகள் ஆகஸ்ட் முதலாம் திகதியே ஆடி அமாவாசை விரதம் அனுஷ்டிக்கப்பட வேண்டும் எனவும் பிதுர்கடன்களை மறுநாள் செய்யலாமெனவும் கூறி வருகின்றனர்.
ஆடி அமாவாசை திதி அன்றைய தினம் மாலை 4.50 வரை வியாபித்திருப்பதால் அன்றைய தினமே அமாவாசை விரதம் அனுஷ்டிக்கப்பட வேண்டுமென்பதில் யாருக்கும் கருத்து முரண்பாடு கிடையாது. ஆனால், வழமைக்கு மாறாக சூரிய கிரகணம் காரணமாக பாதகமான நிலையில் இருப்பதுதான் அவதானிக்கப்பட வேண்டியது. இந்துக்களின் காலநிர்ணயத்தில் கிரகணகாலம் தோஷமான காலமென்பதால் விரத அனுஷ்டானங்கள் அனுஷ்டிக்கக்கூடாது என முன்னோர்கள் கூறியுள்ளனர். அதனை விட அமாவாசை திதி வியாபகத்தில் கிரகணம் பற்றிப்பிடிப்பது தோஷம்.
எனினும் ஆடி அமாவாசை விரதத்தை மறுநாள் அனுஷ்டிக்கக் கூடாதென எந்த ஜோதிடநூலும் தெரிவிக்கவில்லை என்பதால் மறுநாள் அனுஷ்டிக்கலாமெனவும் சில ஜோதிட விற்பனர்கள் கூறுகின்றனர்.