* வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம கூறுகிறார்
கொழும்பில் நடைபெறவுள்ள சார்க் உச்சி மாநாட்டுக்கு வெளிநாடுகளின் ஆதரவை விட உள்நாட்டு ஆதரவே முக்கியம். எனவே, அனைவரும் ஒன்றுபட்டு இந்த சார்க் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவோமென அனைத்துக் கட்சிகளுக்கும் வெளிநாட்டமைச்சர் ரோஹித போகொல்லாகம அழைப்பு விடுத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சார்க் மாநாட்டு செலவீனங்கள் தொடர்பிலான குறை நிரப்புப் பிரேரணையை சபையில் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு அழைப்பு விடுத்த அமைச்சர் மேலும் கூறியதாவது;
"இந்த சார்க் மாநாட்டின் மூலம் உலக சனத் தொகையின் 23 வீத மக்களுக்குத் தலைமையேற்கும் வாய்ப்பை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பெற்றுள்ளார். இது எமது நாட்டுக்குத்தான் பெருமை.
விடுதலைப் புலிகளின் பிடியில் இந்த நாட்டின் பல அரசாங்கங்கள் சிக்குண்டிருந்தன. ஜனநாயகம் மீறப்பட்ட ஒரு நாடாகவே இலங்கையை சர்வதேச நாடுகள் கணக்கிட்டு வைத்திருந்தன. ஆனால், இன்று அந்த நிலைமையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மாற்றியமைத்துள்ளார்.
இந்த சார்க் மாநாட்டில் எமது நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளன. பொருட்களின் விலையேற்றங்கள் எரிபொருள் பிரச்சினைகள் தொடர்பில் நாம் பிரேரணைகளை முன்வைக்கவுள்ளோம். பயங்கரவாத குற்றவியல் தொடர்பிலும் சார்க் நாடுகளிடையே இணக்கங்கள் காணப்படவுள்ளன. சார்க் பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை ஒழிக்க நடவடிக்கையெடுக்கப்படும்.
இந்த சார்க் மாநாட்டை முன்னிட்டு எமது நாட்டிலும் பல அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சார்க் கிராமங்களை நாம் உருவாக்குகிறோம்.
எனவே தான், குறை நிரப்பு பிரேரணையாக நான் 288 கோடி ரூபாவுக்கான அனுமதியை உங்கள் முன் கோரி நிற்கின்றேன். சார்க் மாநாட்டுக்கு வெளிநாடுகளின் ஆதரவை விட உள்நாட்டில் கிடைக்கும் ஆதரவே முக்கியமானது.
இந்த சார்க் மாநாடு வெற்றிபெற அனைவரும் கட்சிபேதம் பாராது ஒத்துழைக்க வேண்டுமெனக் கோருகின்றேன்'.