தேர்தல் பிரசாரத்துக்காக அரச சொத்துகளையும் வாகனங்களையும் முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பாக இதுவரை 14 முறைப்பாடுகள் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான அமைப்புக்கு கிடைத்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இவ்வாறான முறைகேடுகள் இடம்பெற்று வருவதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் ஒன்பது முறைப்பாடுகள் தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பானவையாகும். இது தொடர்பில் அமைச்சுக்களின் திணைக்களங்கள் அரசியலமைப்பு நிறுவனங்கள் மற்றும் இடைத்தர அரச நிறுவனங்கள் என்பவற்றுக்குச் சொந்தமான வாகனங்கள் இந்த தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கென முறைகேடாகப் பாவிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனங்களில் பிரசாரத்திலீடுபடும் அரசியல் கட்சிகளின் இலச்சினைகள் மற்றும் வேட்பாளர் இலக்கங்கள் என்பன காட்சிக்கு வைக்கப்பட்ட நிலையில் இவ்வாகனங்கள் பிரசாரத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கபபட்டுள்ளது.
அத்துடன், இவ்வாறான தேர்தல் பிரசாரத்துக்கென வடமத்திய மாகாண சபை, சுகாதார அமைச்சு, தேச நிர்மான அமைச்சு மற்றும் மீன்பிடித்துறை அமைச்சு ஆகிய அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதற்கும் மேலாக அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரப் பணியாளர்கள் அரசுக்குச் சொந்தமான சுற்றுலா விடுதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் வசிப்பிடங்களை தமது தேவைக்குப் பயன்படுத்துவதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைவிட அரச சொத்துகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக ஒரு குற்றச்சாட்டும். அரசுக்குச் சொந்தமான தளபாடங்கள் மற்றும் உபகரணங்களைத் தேர்தல் பிரசார நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியமை தொடர்பான மற்றொரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அரச சொத்துகளை குறிப்பிட்ட ஒரு கட்சி தமது தேர்தல் நோக்கங்களுக்காக தவறான முறையில் பயன்படுத்துவது பிரசாரத்திலீடுபடும் ஏனைய கட்சிகளை தவறான முறையில் மேலாண்மை செய்யும் ஒரு போக்காகும் என்றும் இது தேர்தல் சட்ட விதிகளை மீறும் ஒரு நடவடிக்கை என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இந்த முறைகேடுகள் தொடர்பாக சுதந்திரமான நீதியானதுமான தேர்தல் நடவடிக்கைகளுக்கான அமைப்பு விடுத்துள்ள அறிவிப்பில் இம்மாகாண சபைகளின் தேர்தல் பிரசாத்தில் அரச சொத்துகளை தவறாகக் கையாள்வது தொடர்பான முறைப்பாடுகளை இலங்கைப் பிரஜையான எந்தவொருவருக்கும் தெரிவிக்க உரிமையுண்டு என அறிவித்திருப்பதுடன் இவை தொடர்பான தகவல்களை தர விரும்புவோர் 0602188106 என்ற தொலைபேசி இலக்கத்துடனும் 0112866224 என்ற தொலை நகல் இலக்கத்துடனும் தொடர்பு கொள்ளுமாறும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது.