ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸை ஆதரித்து வாக்களித்து அதன் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வதன் மூலமே கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களிலுள்ள அரசியல் தலைமைத்துவ வெற்றிடங்களை தமிழ் மக்களால் நிரப்ப முடியுமென்று மேலக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கலாநிதி ந. குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் யானைச்சின்னத்தில் போட்டியிடும் மேலக மக்கள் முன்னணியின் இரு வேட்பாளர்களின் வெற்றியும் தொழிலாளர் உரிமை போராட்டத்திற்கான விடியலுக்கு வழிவகுக்கும்.
மனோ கணேசனின் தெரிவான பாஸ்கரன் அண்ணாமலை, ரூபன் பெருமாள் இருவரும் இளைஞர்களாவர். மனோ கணேசனின் கரங்களை மட்டுமல்ல தோட்டத் தொழிலாளர்களின் கரங்களையும் பலப்படுத்த வல்லவர்கள்.
அங்கே இருக்கக்கூடிய தலைமைத்துவ வெற்றிடத்திற்கு மேலக மக்கள் முன்னணியின் தாயமைப்பான ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸை வழிநடத்தும் பிரபா கணேசனின் உதவியை நாடியவர்கள் அரசியல் அநாதரவாக்கப்பட்ட கேகாலை, இரத்தினபுரி மக்கள். எனவே, யானை சின்னத்தில் இருவரது வெற்றியையும் அதிகபட்ச வாக்குகளால் மக்கள் பெற்றுத்தருவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.