சாவகச்சேரியில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை பாரிய சுற்றிவளைப்பு மற்றும் தேடுதலை மேற்கொண்ட படையினர் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை பலத்த விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.
சாவகச்சேரி நகருக்குக் கிழக்கே, நகரிலிருந்து மட்டுவில் வரையும் தெற்கே நகரிலிருந்து மீசாலை வரையும் இந்தப் பாரிய சுற்றிவளைப்பும் தேடுதலும் நடைபெற்றுள்ளன.
அதிகாலை 5 மணியளவில் இந்தப் பகுதிகளுக்கு வந்த படையினர் காலை 7 மணியளவில் சுற்றிவளைப்பையும் தேடுதலையும் ஆரம்பித்தனர்.
சாவகச்சேரிக்கு கிழக்கே பெருங்குளம் வீதி மற்றும் தபாற்கந்தோர் வீதியில் மட்டுவில் வரையும் நகருக்குத் தெற்கே கிராம்புவில், சங்கத்தானை, மீசாலை பகுதிகளும் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது.
இதன்போது வீடுகளிலிருந்த பொது மக்கள் அனைவரும் பாடசாலை மைதானங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்து தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவ்வாறு 7000இற்கும் மேற்பட்ட மக்கள் பொது இடத்தில் வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்ட போது சுற்றிவளைப்பு நடைபெற்ற இடங்களுக்குச் செல்ல எவரும் அனுமதிக்கப்படாததுடன் அங்கிருந்து வெளியேற எவரும் அனுமதிக்கப்படவில்லை.
இந்தச் சுற்றிவளைப்பின் போது பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அரச ஊழியர்கள் உரிய இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன் ஏனையோர் நீண்ட நேரத்தின் பின்னரே வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இந்தச் சுற்றிவளைப்பு சில இடங்களில் முற்பகல் 11 மணிவரை நடைபெற்றதுடன் சில பகுதிகளில் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெற்றுள்ளது.
இந்தச் சுற்றிவளைப்புத் தேடுதலில் நூற்றுக்கணக்கான படையினர் ஈடுபட்டதுடன் பவள் கவசவாகனங்களும் அந்தப்பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்தன.
இந்தத் தேடுதலால் நேற்றுக்காலை சாவகச்சேரி நகரின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.