இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் தென்னாபிரிக்க அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
தென்னாபிரிக்கா இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளிடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லேயில் நடந்தது. இதில் முதல் இனிங்சில் இங்கிலாந்து 203 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதையடுத்து தனது முதல் இனிங்சில் ஆடிய தென்னாபிரிக்க அணி முதல் இனிங்சில் 522 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தது. டிவில்லியர்ஸ் 174 ஓட்டங்களும், பிரின்ஸ் 149 ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் 319 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2வது இனிங்சில் ஆடிய இங்கிலாந்து அணி 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 50 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அலிஸ்டர் குக் 23 ஓட்டங்களுடனும், அண்டசன் ஓட்டம் எதுவும் எடுக்காமலும் களத்திலிருந்தனர்.
நேற்று முன்தினம் 4 ஆவது நாள் ஆட்டம் நடந்தது. இங்கிலாந்து அணி தொடர்ந்து 2 ஆவது இனிங்சில் ஆடியது. தென்னாபிரிக்க வீரர்களின் சிறப்பான பந்து வீச்சில் இங்கிலாந்து விக்கெட்டுகள் சிறிய இடைவெளியில் விழுந்த வண்ணமிருந்தன. இங்கிலாந்து அணி 327 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக பிராட் 67 ஓட்டங்களும், குக் 60 ஓட்டங்களும் எடுத்தனர். தென்னாபிரிக்க அணி தரப்பில் ஸ்டெயின், மோர்கல் தலா 3 விக்கெட்டும் நிற்னி, கலிஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 9 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தென்னாபிரிக்க அணி 1.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி9 ஓட்டங்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கப்டன் ஸ்மித் 3 ஓட்டங்களுடனும், மெக்கன்சி 6 ஓட்டங்களுடனும் களத்திலிருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் தென்னாபிரிக்கா 10 என்று முன்னணி வகிக்கிறது.