இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மென்டிஸ் பந்துவீசும் போது அவரது மணிக்கட்டு அசைவைக் கவனித்தால் எளிதாக விளையாடலாமென இந்திய வீரர்களுக்கு முன்னாள் வீரர் குண்டப்பா விஸ்வநாத் அறிவுரை கூறியுள்ளார்.
டெல்லியில் நடந்த விழாவில் நேற்று முன்தினம் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஸ்வநாத் மென்டிஸ் பந்தைக் கையிலிருந்து விடுவிக்கும் முன் அவரது விரல்கள் மற்றும் மணிக்கட்டுப் பகுதியை நன்றாகக் கவனித்தாலே போதும். அவரை எளிதாக எதிர்கொள்ள முடியும் என்றார்.
மென்டிஸை முரளிதரனுடன் ஒப்பிட முடியாது. முரளிதரன் டெஸ்ட் போட்டியில் 700 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளார். ஆனால், மென்டிஸ் தற்போது தான் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார் ' என்றார்.
கான்பூரில் 1969 இல் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய விஸ்வநாத் 2 ஆவது இனிங்ஸில் 137 ஓட்டங்களைக் குவித்தார். அப்போட்டியில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜோன் கிலீசன் சுழற்பந்து வீச்சில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும் விஸ்வநாத் மட்டும் சதமடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் மென்டிஸின் அபார சுழற்பந்து வீச்சால் இந்திய அணி 100 ஓட்ட வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.