* குறும்பட வெளியீட்டு விழாவில் வடமாகாண சபை செயலர் தெரிவிப்பு
தனிநபர் விடும் தவறே ஒரு நிறுவனத்தை அதன் தோல்விக்கு இட்டுச் செல்கிறது. "ஒரு நாள்' என்ற குறும்படம் அதனை விபரிப்பதாக அமைவதாக வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் எஸ்.ரங்கராஜா தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபையின் கல்வி, பண்பாட்டலுவல்கள் அமைச்சின் பண்பாட்டுத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட "ஒருநாள்' குறும்படத்தின் வெளியீட்டு நிகழ்வு கடந்த திங்கட்கிழமை பிற்பகல் வடக்கு மாகாண சபையின் கேட்போர்கூடத்தில் நடத்தப்பட்டது. வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் ஆரம்பவுரை நிகழ்த்தினார். ஒருநாள் குறும்படம் வடக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தயாரித்து வெளியிடும் இரண்டாவது குறும்படம் இதுவாகும். முதலாவது குறும்படம் "ஏக்கம்' என்பதாகும்.
ஊடகங்களின் செல்வாக்கு குடும்பங்களில் ஏற்படுத்தும் தாக்கங்களை வெளிப்படுத்துவதாக "ஏக்கம்' அமைந்தது. "ஒருநாள்'குறும்படம் அலுவலகத்தில் ஒருநாள் பணி எவ்வாறு அமைகிறது என்பதை சுயவிமர்சனம் செய்வதாக இருப்பதாக செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார். வடக்கு மாகாண பண்பாட்டுத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் திருமதி என்.ஸ்ரீதேவி, "ஒருநாள்' குறும்படத்தின் முதலாவது இறுவட்டை முதன்மை விருந்தினரான பிரதம செயலாளர் ரங்கராஜாவிடம் கையளித்தார்.
"இக்குறும்படம் நிறுவன நிர்வாகத்திற்குத் தாக்கமான கருத்துகளை வெளியிடுவதாக திறமையாக தயாரிக்கப்பட்டுள்ளது. நிர்வாகத்தினரான நாமே இக்குறும்படத்தில் இலக்குவைக்கப்பட்டுள்ளோம். எம்மை நாமே சுயவிமர்சனம் செய்வதாக அமைந்திடும் இப்படம் யாரையும் புண்படுத்துவதாக அமையவில்லை. குறும்படத்தில் காண்பிக்கப்பட்ட குறைகளை நிராகரிக்க முடியாது. ஆனால், நிர்வாகத்தில் சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரும் அவ்வகையைச் சேர்ந்தவர்கள் அல்லர். எமது நிர்வாகத்தில் அவ்வாறான ஒருவர் இருந்தால் போதும் ஏனையோரும் அவப்பெயரைப் பெறுகின்றனர். "ஒருநாள்' குறும்படம் நிதானமான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளது. அலுவலகத்திற்கு ஒரு பணியாளர் நேரம் பிந்தி வருகின்றார். ஆனால், நேரம் முந்தி மாலையில் அலுவலகத்திலிருந்து வீட்டுக்குப் புறப்படுகின்றார். அலுவலகத்தின் நிர்வாக அதிகாரியின் "கருணை' இதற்குக் காரணமாகிறது என்ற கருத்தைக் கோர்வையாக "ஒருநாள்' குறும்படம் விவரிக்கிறது. படம் சிறப்பாக அமைந்துள்ளது' என்று பிரதம செயலாளர் ரங்கராஜன் தெரிவித்தார்.
வடக்கு மாகாணப் பண்பாட்டுத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி என்.ஸ்ரீதேவி நன்றியுரையில் இக்குறும்படத் தயாரிப்பில் பிரதம செயலாளர், கல்விச் செயலர் உட்பட நிர்வாகமே பூரண ஆதரவளித்ததாகக் குறிப்பிட்டார். 23 நிமிடங்கள் 35 விநாடிகள் மட்டுமே ஓடும் இப்படத்தை வடக்கு மாகாண சபையின் அமைச்சுச் செயலாளர்கள், வடமாகாண ஆளுநரின் செயலாளர், உயரதிகாரிகள், பணியாளர்களும் பார்த்தனர்.