கந்தளாய் சீனித் தொழிற்சாலையை மீண்டும் திறக்கும்படி தாம் அரசாங்கத்தைக் கோருவதாக திருகோணமலை மாவட்ட மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த விஜேசேகர தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த சிந்தனை கொள்கைத் திட்டத்தின் கீழ் தாம் பதவிக்கு வந்ததும் கந்தளாய் சீனித் தொழிற்சாலையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தற்போதைய ஜனாதிபதி உறுதியளித்திருந்தார். ஆனால், அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படுவதாகத் தெரியவில்லை.
இப்போது கந்தளாய் சீனித் தொழிற்சாலையில் கைவிடப்பட்டுள்ள இயந்திரங்கள், உபகரணங்கள் எல்லாம் பழைய இரும்பு விலைக்கு விற்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசாங்கம் அளித்த வாக்குறுதியின்படி கந்தளாய்ச் சீனித்தொழிற்சாலையை மீண்டும் இயக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்? என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த விஜயசேகர தெரிவித்தார். அரசாங்கம் இத்தொழிற்சாலையை மீண்டும் இயக்காவிடின் அதற்காக மக்கள் போராட்டம் ஒன்றை நடத்த உத்தேசித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
1961 ஆம் ஆண்டில் கந்தளாய் சீனித்தொழிற்சாலை ஸ்தாபிக்கப்பட்டது. சுமார் 5 ஆயிரம் பேருக்கு இத் தொழிற்சாலை மூலம் தொழில் வாய்ப்புக்கிடைத்தது. தொழிற்சாலை மூடப்பட்ட பின்னர் சீனி இறக்குமதிக்காக பல மில்லியன் ரூபா பணத்தை அரசாங்கம் ஆண்டுதோறும் செலவழித்து வருகின்றது.
கந்தளாய் சீனி ஆலையில் சீனி உற்பத்தியை ஆரம்பிப்பதன் மூலம் வெளிநாட்டுச் செலாவணியை மீதப்படுத்த முடியும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த விஜயசேகர தெரிவித்தார்.