*மாத்தளை மாநகரசபை எதிர்க்கட்சித் தலைவர்
எமது நாட்டில் ஊடக சுதந்திரம் முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் கூறி வருகின்றபோதும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள் விரட்டி விரட்டி அடிக்கப்படுகின்றனர். ஒரு அரசாங்கம் தவறான வழியில் செல்லும் போது எதிர்க்கட்சியினர் ஊடகவியலாளர்களுடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டே அரசாங்கத்தை சரியான வழியில் இட்டு செல்ல வேண்டுமென வரலாறுகள் கூறுகின்றபோதும் எமது நாட்டில் அவ்வாறு செயற்பட முடியாமலுள்ளது. ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்காச்ன வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமே நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியும். எனவே, எமது நாட்டு ஊடகவியலாளர்களுக்கு அத்தகைய வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது இன்றைய அரசாங்கத்தின் தார்மீக கடமையாகும். இவ்வாறு மாத்தளை மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் டல்ஜித் அலுவிகார தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாத்தளை மாநகர சபையின் மாதாந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். மேற்படி கூட்டம் மாத்தளை மாநகர பிதா முஹமது ஹில்மி கரீம் தலைமையில் நகர கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்;
ஆரம்பகாலத்தில் கொழும்பு பிரதேசங்களில் மட்டுமே காணப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு எதிரான அரச பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் படிப்படியாக மாகாணங்களுக்கும் பரவி தற்போது மாத்தளை மாநகரசபை நிர்வாகத்துக்குள்ளும் ஊடுருவியுள்ளது. அண்மையில் மாத்தளை மாநகர சபை ஆணையாளர் ஊடகவியலாளர் ஒருவரைத் தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. இது உண்மையெனில் கட்டாயமாக கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
எமது நகரசபையின் மாதாந்த கூட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானமும் அமுல்படுத்தப்படுவதில்லை. மாதாந்த கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களை நிறைவேற்ற முடியாத நிலையில் கூட்டங்களை நடத்தி கால நேரத்தை வீண் விரயமாக்குவது அர்த்தமற்ற செயலாகும். எனவே, கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை செயற்படுத்த நகரபிதா நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் மாதாந்த கூட்டங்கள் நடத்தப்படுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
தற்போது எமது நகரசபைக்குள் ஊழல்கள், வீண்விரயங்கள், சட்டவிரோத செயற்பாடுகள் பெருமளவில் அதிகரித்துள்ளன. நகரசபை ஆணையாளர் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை தக்கமுறையில் பயன்படுத்துவாரானால் இவ்வாறான முறைகேடான நடவடிக்கைகள் ஏற்பட வாய்ப்புக்கிட்டாது.
நகரசபையின் தற்போதைய செயலாளரின் ஆலோசனையை நகரபிதா பெற்று செயல்படுவதன் மூலம் சிறந்த முறையில் செயலாற்ற முடியும் என்றார்.
நகரசபை உறுப்பினர் ரொஷான் டி சில்வா உரையாற்றும் போது;
இது ஒரு பௌத்த நாடாக இருந்தபோதும் ஊடகவியலாளர்களைப் போன்றே தமது உரிமைகளுக்காக போராட்டம் நடத்திவரும் பௌத்த பிக்குகளும், விரட்டியடிக்கப்படுகின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகள் அரசாங்கத்துக்கே பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்தி வருகின்றன.
சுற்றாடலுக்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அதிக ஒலியுடன் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தக் கூடாதென உயர்நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளபோதும் கடந்த போயா தினங்களின் போது இச்சட்டத்தை மீறும் வகையிலான செயல்பாடுகள் ஒரு சில பௌத்த விகாரைகளில் இடம்பெற்றன. எனவே, நீதிமன்ற சட்டதிட்டங்களை கொச்சைப்படுத்தும் செயல்பாடுகளை தடுத்துநிறுத்த நகரபிதா நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.