*அமைச்சர் மஹிந்தானந்த தெரிவிப்பு
சார்க் மாநாட்டின் மூலம் வறிய மக்களும் நேரடியாகப் பயன் பெறக் கூடியதோர் திட்டமாக சார்க் நட்புறவுக் கிராமம் அமைந்துள்ளது என்று மின்சக்தி எரிபொருள்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
உலப்பனை மஹவிலவத்தையில் நிறுவப்பட்டுள்ள சார்க் நட்புறவுக் கிராமத்தின் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
"" சார்க் நட்புறவுக் கிராமம் என்ற சிந்தனை ஜனாதிபதியினுடையதாகும். இக்கிராமத்தை நூறு நாட்களுக்குள் மக்களின் பங்களிப்புடன் கட்டியெழுப்பினோம்.
இவற்றுள் ஒரு வீடு இருபத்தைந்து நாட்களுக்குள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது பாராட்டப்பட வேண்டிய முயற்சியாகும்.
மேலும், எண்ணூ<று வீடுகளை நிர்மாணிக்கவும் திட்டமிடப்படடுள்ளது. மூன்றாம் உலக நாடுகளில் மக்களின் எதிர்பார்ப்புகள் அரசின் மீது குவிந்துள்ள நிலையில், அரசின் அபிவிருத்தி வேலைத் திட்டங்களிலும் மக்களின் குறைபாடுகளை தீர்க்கும் முயற்சிகளிலும் மக்கள் பங்களிப்பு இருக்குமானால் கூடிய பயனை அடையலாம் என்பதற்கு சார்க் நட்புறவுக் கிராமம் முன்னுதாரணமாகும்.
இக்கிராமம் வீட்டுத் தோட்டங்களைக் கொண்ட விவசாயக் கிராமமாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.
சார்க் அமைப்பின் தலைமைப் பதவி இலங்கைக்குக் கிடைக்கும் போது தாங்கிக் கொள்ள முடியாத ஐக்கிய தேசியக் கட்சி விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளது.
ஆனால், இம்மாநாட்டின் பெயரால் அடிப்படை வசதிகளற்ற மக்கள் பெறும் நன்மைகள் பற்றி ஏன் எதிர்க் கட்சி சிந்திக்கவில்லை' என்றும் குறிப்பிட்டார்.