நுவரெலியா மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட முடியாத அரசியல் பலமில்லாதவர்கள் சப்ரகமுவ மாகாணத்தில் வசிக்கும் தமிழ் முஸ்லிம் சமூகங்களின் ஐக்கியத்தை சீர்குலைக்கும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள் . இதற்கு ஒருபோதும் எமது மக்கள் இடமளிக்கக் கூடாது என்று மேலக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் ஏணி. எஸ்.இராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
எட்டியாந்தோட்டை பளாவத்த தோட்டத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது;
இ.தொ.கா.வின் முதன்மை வேட்பாளர் கேகாலை மாவட்டத்தில் எவரைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடுகின்றார்? இம்மாவட்டத்தின் தமிழ் மக்களையா? அல்லது முஸ்லிம் மக்களையா? என்று கேட்க விரும்புகின்றேன். தமிழ் மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் வாக்கு வங்கியை தேவையில்லாமல் சிதறடித்து இந்த இரண்டு சகோதர இனத்தவர்களின் பிரதிநிதித்துவத்தையும் இல்லாமல் ஆக்கும் கைங்கரியமே மேற்கொள்ளப்படுகின்றது.
இதன்மூலம் இரு சமூகமும் பெறுகின்ற ஒரேயொரு பிரதிநிதித்துவத்தை தனித்துப் போட்டியிடும் ஜே.வி.பி.க்கு செல்லும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க வழிவகுக்கும். இந்நிலையில், மூன்று உறுப்பினர்களைப் பெறுவோம் என்று கூறுவது மக்களை மட்டுமல்ல தமது சகவேட்பாளர்களையும் ஏமாற்றும் செயலாகும். மூன்று உறுப்பினர்களைப் பெறுவதற்கு தனித்துப் போட்டியிடும் ஒரு கட்சி குறைந்தபட்சம் 40 ஆயிரம் வாக்குகளைப் பெற வேண்டும் என்ற உண்மையை மறந்து அல்லது மறைத்து கருத்துத் தெரிவிக்கக்கூடாது.
ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணியில் தமிழ் மக்களின் சார்பாக எமது வேட்பாளர் பாஸ்கரன் அண்ணாமலை போட்டியிடுகின்றார். இதே அணியில் சகோதர முஸ்லிம் மக்களின் சார்பாக சகோதர முஸ்லிம் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றார்கள். இம்மாவட்டத்திலே வாழும் தமிழ், முஸ்லிம் வாக்காளர்கள் தங்களது விருப்பு வாக்குகளை எமக்குக் கூட்டாக வழங்க வேண்டும் என நாங்கள் கோருகின்றோம்.
இதன்மூலம்தான், இம்மாவட்டத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களின் மாகாணசபை பிரதிநிதித்துவத்தை தக்க வைக்க முடியுமென எமது தலைவர் சிந்தித்து இணைந்து போட்டியிடுகின்றோம். உண்மைகளை நான் கொழும்பிலிருந்து கொண்டு அறிக்கைகள் மூலம் சொல்லவில்லை. உங்களது தோட்டத்திற்கு வந்து எட்டியாந்தோட்டையில் இருந்து கொண்டு உங்களிடம் நேரடியாகக் கூறுகின்றேன் என்றார்.