யால தேசிய வனப்பகுதியில் படையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அண்மைக் காலங்களில் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் வேட்டையாடுவோர் தொகை அதிகரித்து வருவதாக வன பரிபாலன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சில தினங்களுக்கு முன்னர் வன பரிபாலன அதிகாரிகள் இங்கு தேடுதல் நடத்திய போது வேட்டைக்காரர் ஆறு பேரை பிடித்துள்ளனர்.
இவர்களிடம் இருந்து பத்துக்கும் மேற்பட்ட வேட்டையாடிய மான்களையும் கைப்பற்றியுள்ளனர்.
இவர்களிடம் இருந்து உள்ளூர் துப்பாக்கிகள் மற்றும் கத்தி, கோடரி போன்ற ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.
விடுதலைப் புலிகளின் நடமாட்டம் யால தேசிய வனப்பகுதியில் அதிகமாக காணப்படுவதாகக் கூறி படையினர் இங்கு தேடுதல்களை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அந்த நிலையில், வேட்டைக்காரர்கள் இக்காட்டுப்பகுதியில் எவ்வாறு துணிவுடன் வேட்டையாட முடியும் எனவும் வனபரிபாலன அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அண்மைக் காலங்களில் இப்பிரதேசங்களில் மான் இறைச்சி, மரை இறைச்சி அதிகளவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இக்காட்டில் வேட்டையாடுவது தண்டனைக்குரிய குற்றம் என அறிவித்தல்களும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.