* திருமலை மேல் நீதிமன்ற நீதிபதி விதிப்பு
திருகோணமலை உவர்மலை கோணேஸ்வரம் சிறுமி பாலியல் துஷ்பிரயோக வழக்கில் இராணுவ வீரர் ஒருவருக்கு திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் 14 வருட கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்துள்ளார்.
2002 ஆம் ஆண்டு திருமலை உவர்மலை கோணேஸ்வரம் பகுதியில் 7 வயதுச் சிறுமியொருவரை இராணுவ சீருடைதரித்த சிப்பாயொருவர் கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த போது, சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு கடைச்சிப்பந்தி ஒருவரும், வீதியால் சென்ற மதகுரு ஒருவரும் கூக்குரலிடவே, கிராம மக்கள் அங்கு வந்து அந்தச் சிப்பாயை பிடித்து மின்கம்பத்தில் கட்டிவைத்த பின் அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இந்தச் சிப்பாய்க்கு எதிராக ஆட்கடத்தல் குற்றச்சாட்டையும், மோசமான பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டையும் சுமத்தி சட்டமா அதிபர் திருமலை மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
தனது வாயை ஒருகையால் பொத்தி மறுகையால் தன்னைத் தூக்கிக் கொண்டு சென்று பிள்ளையார் கோவில் வேப்பமரத்தடியில் வைத்து இராணுவச் சிப்பாய் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சிறுமியும் நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார்.
சிறுமியின் அழுகுரல் கேட்டு ஓடிவந்த போது இந்த இராணுவச் சிப்பாய் சிறுமியை தூக்கிக் கொண்டு செல்வதைக் கண்டதாக கடைச் சிப்பந்தியும், கண்கண்ட சாட்சியமளித்துள்ளார்.
வேப்பமரத்தடியில் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததைக் கண்டதாக, வீதியால் சென்ற மதகுருவும் சாட்சியமளிக்கவே, இதையடுத்து நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை திருமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன், மேற்படி இராணுவச் சிப்பாயை குற்றவாளியெனத் தீர்ப்பளித்து ஆட்கடத்தல் குற்றச்சாட்டுக்கு மூன்று வருட கடுங்காவல் சிறைத்தண்டவையும் 5000 ரூபா அபராதமும் விதித்ததுடன் மோசமான பாலியல் குற்றச்சாட்டுக்கு பத்து வருட கடுங்காவல் சிறைத் தண்டனையும் 5000 ரூபா தண்டப்பணமும் விதித்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50,000 ரூபா நஷ்டஈடு செலுத்த வேண்டுமெனவும் கட்டத்தவறினால் மேலும் ஒரு வருடசிறைத் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார்.
இதன் மூலம் இவருக்கு 14 வருட கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை அரச சட்டவாதி செல்வி சுகந்தி கந்தசாமி நெறிப்படுத்தினார்.