* பிரதியமைச்சர் புத்திரசிகாமணி
இந்தியாவில் ஒரு சில கிராமங்களில் பஞ்சாயத்து முறை என்ற ஒன்று உண்டு. இங்கு வாழும் மக்கள் தமக்குள் ஏற்படும் பிரச்சினைகளை இப்பஞ்சாயத்தின் மூலமே தீர்த்துக்கொள்வர். நீதிமன்றங்களுக்கு செல்வதில்லை. தீர்ப்பு வழங்க மக்களில் ஒருவரே தலைவராக இருப்பர்.
வெலிக்கடை சிறைச்சாலையில் மத்தியஸ்த சபை பயிற்சி காரியாலயமும், மேன்முறையீட்டு மேல் நீதிமன்றமும் அண்மையில் பிரதம நீதியரசர் சரத் என்.டி.சில்வா வினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக நீதி சட்ட மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் வீ.புத்திரசிகாமணி கலந்துகொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
உயர் நீதிமன்ற நீதியரசர் சரத் என்.டி.சில்வா தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் அவர் தொடர்ந்து பேசுகையில்; நான் இந்த அமைச்சுக்கு பதவியேற்று வந்ததன் பின் பார்த்த ஒரு விடயம் நம் நாட்டு மக்கள் சிறு சிறு விடயங்களுக்கு கூட சண்டை பிடித்து அதை பெரிதுபடுத்தி இறுதியில் நீதிமன்றம் வரை செல்வார்கள்.
நமது பிரதம நீதியரசர் ஆசிரியர்கள் பற்றாக்குறையின் போது 3 ஆயிரம் ஆசிரியர்களை உடனே நியமிக்கும்படி தீர்ப்பு வழங்கி நமக்கு பெரிய சேவையை ஆற்றினார்.
ஐயாயிரம் கைதிகள் இருக்கவேண்டிய இடத்தில் இருபத்திரண்டாயிரம் கைதிகள் இருக்கின்றனர். எனினும் சிறைக்கூடங்களை அதிகரிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. சிறைக்கு வரும் கைதிகளின் எண்ணிக்கையை குறைக்கவேண்டுமே தவிர சிறைக்கூடங்களை அதிகரிக்கக்கூடாது.
ஏனெனில் நாம் மக்களின் பணத்தை பெற்று தவறு செய்துவருபவர்களுக்கு உணவு, உடை கொடுத்து அவர்களை வளர்க்கிறோம். குற்றம் செய்பவருக்கு தண்டனை வழங்கி நீதியைக் காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு குற்றங்களையும், குற்றம் செய்பவரின் எண்ணிக்கையையும் குறைக்க முடியும். அதற்கு அமைவாக உருவானதே இந்த மத்தியஸ்த சபை.
இந்த உலகில் மனிதனால் முடியாது என்று சொல்லக்கூடியது ஒன்றுமில்லை. ஏனெனில் நாங்கள் சேவை செய்வது மக்களுக்காக அவர்களின் நலனுக்காக. நீதிக்கு எந்தவிதமான இடையூறும் வராதபடி நாம் மக்களுக்கு சேவைசெய்யும்போது அநேக பிரச்சினைகளுக்கு எம்மால் தீர்வு காணமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.