*இலங்கை வெளியுறவுச் செயலர் கூறுகிறார்
ரொஷான் நாகலிங்கம்
சார்க் மகாநாட்டுக்கு புறம்பாக இந்திய பாகிஸ்தான் தலைவர்கள் சந்திப்பது தொடர்பில் எதுவும் தெரியாதென வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோஹன தெரிவித்ததுடன், இது இரு நாடுகளும் சம்பந்தப்பட்ட விடயமெனவும் தெரிவித்தார்.
அத்துடன், வெளிவிவகார செயலாளர்களின் குழுக் கூட்டத்தின் நேற்றைய இரண்டாம் நாள் அமர்வில் சார்க் செயற்றிட்டம் தொடர்பான நிகழ்ச்சி தொடர்பில் 98 வீதம் இணக்கம் காணப்பட்டுள்ளதுடன், முக்கிய ஏனைய மூன்று விடயங்கள் தொடர்பில் இணக்கம் காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இங்கு இணக்கம் காணப்பட்ட விடயம் தொடர்பாக விளக்கமளிப்பதற்காக இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடு நேற்று மாலை பண்டாரநாயக்க ஞாபகார்த்த கற்கை நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் விளக்கமளிக்கையில்;
இன்று இடம்பெற்ற வெளிவிவகார செயலாளர்களின் செயலமர்வின் போது முக்கிய நான்கு விடயங்கள் குறித்த இணக்கம் காணப்பட்டது.
முதலாவதாக சார்க் தலைவர்களின் மாநாட்டுச் செயற்பாடு நிகழ்ச்சி நிரல் தொடர்பில் 95 முதல் 97 வீதம் இணக்கம் காணப்பட்டது. இணக்கம் எட்டப்படாத ஏனைய மூன்று வீத விடயம் ஏனைய அமர்வின் போது இணக்கம் காணப்படும்.
இரண்டாவதாக சார்க் பிராந்தியத்தில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை இணைந்து மேற்கொள்வது தொடர்பாக முழு மனதாக இணக்கம் காணப்பட்டுள்ளது. பிராந்தியத்தில் பரந்து விரிவடைந்து செல்லும் பயங்கரவாதத்தை ஒரு நாட்டினால் மட்டும் தடுக்க முடியாது. எனவே, இணைந்தே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இதில் ஆட்கடத்தல், போதைவஸ்து மற்றும் ஆயுதக் கடத்தல் என்பவற்றைத் தடுப்பதற்கு முழு ஒத்துழைப்பும் வழங்குவதாக செயலாளர்கள் முழு மனதுடன் தெரிவித்தனர்.
ஐ.நா.வின் பயங்கரவாதத்திற்கு எதிரான சாசனம் இறுதி வடிவம் பெற்றுள்ள நிலையில், இதனை நடைமுறைப்படுத்துவதற்கு சார்க் நாடுகள் ஐ.நா.வுக்கு ஆதரவளிப்பதெனவும் முடிவெடுக்கப்பட்டது.
பிராந்திய மக்களின் நலன் கருதியே சார்க் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் அவர்களுக்கு நலனைப் பெற்றுக் கொடுப்பதற்காக எதிர் காலத்தில் ஏற்படவுள்ள உணவு நெருக்கடிக்கு முகம் கொடுப்பதற்கு உணவு வங்கியையும் பிராந்திய அபிவிருத்திக்காக சார்க் அபிவிருத்தி நிதியம் அமைக்கப்படுவதும் ஏனைய இரண்டு இணக்கப்பாடுகளுமாகும்.
இதேவேளை, எரிபொருள் வளங்கள் தொடர்பில் சார்க் பிராந்திய நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முகமாக மாற்று ஏற்பாடுகளான சூரிய சக்தி மற்றும் உயிரியல் வாயு குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், இருக்கின்ற வளங்கள் குறித்து கண்டறிந்து விஸ்தரிப்பது தொடர்பில் ஆய்வு மேற்கொள்வதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போது பிராந்தியத்தில் அனைத்து நாடுகளும் இதன் தாக்கத்துக்கு ஆளாவதை ஏற்றுக் கொண்டனர்.
குறிப்பாக பிராந்தியத்தின் சில இடங்களில் நீர்பற்றாக்குறை ஏற்பட்டது உணரப்பட்டுள்ளது. அத்துடன், இயற்கை அழிவு ஏற்பட்டுள்ளது. எனவே சூழல் மாசடைவதை தடுப்பதற்கு இணக்கம் காணப்பட்டது.
இதேவேளை, சார்க் மகாநாட்டின் போது பிராந்திய பொருளாதாரம் குறித்து இலங்கை யோசனையொன்று முன்வைத்ததையடுத்து பேசப்பட்டதுடன், இதன் முக்கியத்துவம் குறித்து ஏற்றுக் கொள்ளப்பட்டது.
குறிப்பாக பிராந்திய வறுமையை ஒழிப்பதற்கு அபிவிருத்தி முக்கியமானதென்ற வகையில் பிராந்திய அபிவிருத்தியை விருத்தி செய்வதற்கு சார்க் அபிவிருத்தி நிதியத்தை மிகவிரைவாக உருவாக்க சம்மதம் அளிக்கப்பட்டுள்ளது.
அங்கு அவர் கேள்விகளுக்கு பதிலளிக்கையில்;
கலாசாரம், வறுமை ஒழிப்பு மற்றும் சார்க் நாடுகளுக்கான இணைப்பை அதிகரித்து வர்த்தகத்தை விஸ்தரிப்பது தொடர்பில் ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தரை வழி, கடல், வான் மற்றும் ரயில் வலைப்பின்னல் இணைப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான மூலமாக இணைப்பு சுமுகமான இடம் பெறுகின்றது.
அபிவிருத்தி நிதியத்தினை விரைவாக ஆரம்பிப்பதற்கு 300 மில்லியன் அமெரிக்க டொலரில் 100 மில்லியனை இந்தியா பங்களிக்கவுள்ளது. பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதாயின் மக்களுக்கிடையிலான தொடர்புகள் அவசியமென்ற நிலையிலேயே வலைப்பின்னல் இணைப்பு விஸ்தரிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டு வருகின்றது.
சார்க் மகாநாட்டுக்கு புறம்பாக ஏககாலத்தில் சார்க் நாடுகளுக்கிடையிலான தலைவர்களின் சந்திப்பு நடைபெறுவது வழமையானவிடயம். இதன் போது இந்திய, பாகிஸ்தான் தலைவர்கள் சந்திப்பது தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது. இது அந்நாடுகள் சம்பந்தப்பட்ட விடயமென்றார்.