*சாடுகிறார் ரவூப் ஹக்கீம்
நீதிமன்ற தடை உத்தரவுடன் வந்து வீடுகள் உடைக்கப்படுவதற்கு எதிராக எதிர்ப்பை தெரிவித்த தமது இரு மாகாண சபை உறுப்பினர்களை வெள்ளை வான் மூலம் கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப் படுவதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மக்களை அடித்துவிரட்டி காணிகளை அபகரிக்க முனையும் இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கான வேலையை இந்த மாகாண சபை தேர்தல் மூலம் முன்னெடுக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
ஹெம்மாத்தகம நகரில் கடந்த 29 ஆம் திகதி மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.
நடைபெறவுள்ள சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தலில் கேகாலை மாவட்டத்தில் போட்டியிடும் உசைன் அஹமட் உட்பட பல வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற இக்கூட்டத்தில் ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரை தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
இந்த அரசாங்கம் மிகப் படுமோசமான முறையில் சிறுபான்மை இனங்களை நடத்துகின்றது என்றே சகலரினாலும் கருதப்படுகிறது. இதற்கு நிறைய உதாரணங்களை காணலாம்.
இரு வாரங்களுக்கு முன் கொம்பனித்தெரு பகுதியில் ஆயிரம் குடும்பங்களை அவர்களது சிறு சிறு வீடுகளில் இருந்து பலவந்தமாக அகற்றவும் வீடுகளை உடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சார்க் மகாநாட்டுக்கு வரும் தலைவர்களை பாதுகாப்பதற்காக என்று கூறி இந்த அடாவடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட எமது கட்சி மாநகர சபை உறுப்பினர்களை தேடி வெள்ளை வான் வருவதாகவும் சொந்த வீடுகளில் இருக்க முடியாதிருப்பதாகவும் என்னிடம் தெரிவித்திருக்கிறார்கள். இதுதான் இன்று நாட்டில் காணப்படும் நிலைமை. நீதிமன்ற தடை உத்தரவுடன் வந்து வீடுகளை உடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக இன்று வெள்ளை வானில் வந்து மாநகர சபை உறுப்பினர்களையும் கடத்திச் செல்ல முயற்சிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு அரசாங்கமாகவே இன்று இந்த அரசாங்கம் அமைந்திருக்கிறது. ஒரு இடத்தில் மட்டுமன்றி இன்று எல்லா இடத்திலும் இந்த நோய் பரவியிருக்கிறது.
இத்தேர்தலில் இவ்வரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் வேலையை நாம் அனைவரும் செய்து முடிக்க வேண்டும். அரசாங்கத்துடன் இன்று ஒட்டிக்கொண்டிருக்கும் "சேவல்' கட்சிக்காரர்கள் இதனை செய்ய முடியாது. அமைச்சர் தொண்டமானும் நானும் இரண்டு சமூகங்களின் அரசியற் தலைவர்கள். எமக்கிடையில் தனிப்பட்ட வகையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், இன்னொருவருடைய குளத்தில் மீன்பிடிக்கின்ற வேலை ஒரு விபரீதமான விளையாட்டு. இந்த விளையாட்டுக்குள் நாம் பலிபோய்விடக்கூடாது.
எனவே, நாம் விவேகமாக நடந்துகொள்ள வேண்டும். இந்த விவேகத்துடன் எங்களை ஏமாற்ற நினைக்கும் அரசாங்கத்துக்கு இத்தேர்தலில் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும். இத்தேர்தலின் மூலமாக ஜனாதிபதியையும் முழு அரசாங்கத்தையும் வீழ்த்துகின்ற முதலாவது பேரிடியான அடியை நிச்சயமாக கொடுக்க வேண்டும். வழங்கப்படுகின்ற பணத்துக்கு அடிமையாகவோ செய்யப்போவதாக கூறுகின்ற அபிவிருத்தி வேலைகளுக்காகவோ மயங்கவோ கூடாது. இவை யாவும் இத்தேர்தல் காலத்தில் மட்டுமே. எனவே, இது குறித்தும் இப்பகுதி மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.
இன்று அநுராதபுர மாவட்டத்தில் பாரிய மாற்றங்களை நாம் காண்கிறோம். அங்கு பல இடங்களில் அரசாங்க அமைச்சர்களுக்கு மக்கள் தடைவிதித்திருக்கிறார்கள். மின்சாரம் இன்றி ஊருக்குள் வரவேண்டாம் என்று தடுக்கிறார்கள். கிழக்கில் எமக்கு எதிராக செய்தது போன்று இங்கும் வன்முறை, அடாவடித்தன அரசியல் செய்யலாம் என்று முயற்சிக்கிறார்கள். ஆனால், இனிமேல் இதற்கு இடமளிக்க முடியாது.