*"எதிர்பார்ப்புகளை மழுங்கடித்திருக்கும் அரசியல் பதற்றங்கள்'
கொழும்பில் இந்தவார இறுதியில் சந்திக்கும் தெற்காசியத் தலைவர்கள் வர்த்தக ரீதியான பிணைப்புகளை வலுப்படுத்துவது தொடர்பாக கலந்தாலோசனைகளை மேற்கொள்ளவிருக்கின்ற போதிலும் பிராந்தியத்தில் எழுந்துள்ள அரசியல் மற்றும் ஏனைய பதற்ற நிலைமைகளால் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை விரைவில் அமுல்படுத்தப்படுவதற்கான எதிர்பார்ப்புகள் குறைவாகவே காணப்படுவதாக பொருளியலாளர்கள் கூறுகின்றனர்.
சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான யோசனையை சார்க் அமைப்பு 1995 இலேயே முதற் தடவையாக வெளியிட்டது. ஆனால், அந்த யோசனை அதிகளவுக்கு வெறும் காகிதத்திலேயே மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கின்றது. இதற்குப் பதிலாக சார்க் உறுப்பு நாடுகள் இருதரப்பு விடயங்களை கையாள்வதிலேயே கவனத்தை செலுத்துகின்றன. எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பமாகும் உச்சிமாநாட்டின் போதும் பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்பு தொடர்பாக தலைவர்கள் அதிகளவுக்கு நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியம் அருகியே காணப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சார்க்கின் பொருளாதார நிகழ்ச்சி நிரலை அரசியல் பணயம் வைத்துவிட்டதாக எச்.எஸ்.பி.சி.யின் பொருளியலாளர் அர்ஜுனா மகேந்திரன் ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான பகைமையை சார்க் அமைப்பானது பணயம் வைத்திருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
காபூலில் இந்தியத் தூதரகத்தின் மீதான தாக்குதலில் பாகிஸ்தானின் சக்திகளே பின்னணியில் இருப்பதாக இந்தியா குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளமை மற்றும் எல்லையில் இருதரப்பும் மோதலை மீண்டும் ஆரம்பித்திருப்பதும் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது.
"பதற்றம் தணிவதிலும் பார்க்க அதிகரித்து செல்வதையே காணமுடிகிறது' என்று மகேந்திரன் கூறியுள்ளார்.
பிராந்திய சுதந்திர வர்த்தகப் பிரச்சினை, பொது நாணயத்தை புழக்கத்திலீடுபடுத்துவதற்கான சாத்தியம் என்பன குறித்து சார்க் தலைவர்கள் ஆராயவுள்ளனர்.
தெற்காசிய சுதந்திர வர்த்தகப் பகுதி உடன்படிக்கையானது (சப்ரா) 2012 இல் சகல உற்பத்திகளுக்கும் வரி இல்லாமல் செய்வதை நோக்கமாக கொண்டதாகும். 2004 ஜனவரியில் இது கைச்சாத்திடப்பட்டது. 2006 ஜூலை தொடக்கம் இந்த உடன்படிக்கை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.
ஆனால், பிராந்தியத்தின் 150 கோடி மக்களுக்கு உறுதியளிக்கப்பட்டதன் பிரகாரம் பொருளாதார ரீதியான அனுகூலங்களை வழங்க இந்த உடன்படிக்கை தவறிவிட்டது.
தீர்வைச் சலுகைகள் தொடர்பான சச்சரவுகளால் குறிப்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான பிணக்குகளால் பிராந்திய மட்டத்திலான வர்த்தகம் மிகத் தாழ்ந்த மட்டத்திலேயே உள்ளது என்று பொருளியலாளர்கள் கூறுகின்றனர்.
சார்க்கின் பொருளாதாரம் காலக்கிரமத்தில் முன்னேற்றம் கண்டிருக்கிறது. ஆனால், பிராந்தியமட்டத்திலான பரஸ்பர வர்த்தகம் கணிசமான அளவுக்கு முன்னேற்றம் காண்பதில் தோல்வி கண்டுவிட்டது என்று கொள்கைகள் கற்கைகள் நிறுவனத்தின் பொருளியலாளரும் இலங்கையின் புத்திஜீவிகளில் ஒருவருமான தேஷால் டி மெல் கூறியுள்ளார்.
சார்க்கில் பாரிய சந்தையாக இந்தியா உள்ளது. ஆனால், போட்டித்தன்மையை அனுமதிப்பதில் அவர்கள் மெத்தனப்போக்கைக் கடைப்பிடிக்கின்றனர். பதிலாக இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகளுடன் வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொள்கின்றது என்றும் தேஷால் டி மெல் கூறியுள்ளார்.
கிட்டிய வருங்காலத்தில் "சுதந்திர வர்த்தகப் பகுதி' விடயங்கள் மேம்படுமென எதிர்பார்க்க முடியாது என்று அர்ஜுனா மகேந்திரன் தெரிவித்தார். உதாரணமாக இந்தியா சிங்கப்பூருடன் இருதரப்பு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதுடன் ஆசியான் அமைப்புடன் வர்த்தகத்தை விரிவுபடுத்த எதிர்பார்த்திருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.