*ஐ.தே.க. சவால்; "விருந்துபசாரத்திற்கு ஒரு சாப்பாடு ரூபா 10 ஆயிரம்'
ரொஷான் நாகலிங்கம்
சார்க் உச்சிமாநாட்டின் மூலம் இலங்கைக்கு கிடைக்கக் கூடிய நன்மைகளை அரசாங்கத்தால் பட்டியலிட்டு காண்பிக்க முடியுமா என்று பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. சவால் விடுத்துள்ளது.
தேவையற்ற விதத்தில் மாநாட்டுக்காக மக்களின் பணம் விரயம் செய்யப்படுவதாக ஐ.தே.க. வின் கண்டி மாவட்ட எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல குற்றம் சாட்டினார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
மகிந்த சிந்தனையில் 160 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் கர்ப்பிணித் தாய்மாருக்கும் ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ளார். இந்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்ற முடியாத ஜனாதிபதி சார்க் மாநாட்டை நடத்தி மக்களின் பணத்தினை விரயம் செய்து தன்னை பெரிதாக காட்டிக் கொள்ள முற்பட்டுள்ளார்.
இம்முறை சார்க் மாநாடு மாலைதீவிலேயே இடம்பெற வேண்டும். அங்கு பொருளாதார, பயங்கரவாத மற்றும் அரசியல் பிரச்சினை காரணமாக இதனை நடத்துவதற்கு மாலைதீவு மறுத்தது. இத்தருணத்தில் அங்குள்ள இதே பிரச்சினை அதிகமாகவுள்ள இலங்கை இதனை நடத்துவதற்கு இணங்கியது. இப்பிரச்சினைகளுக்கு மத்தியில் இதனை நடத்துவதற்கு ஏற்றுக் கொண்டதன் காரணம் ஜனாதிபதி தன்னை பெரிதுபடுத்தி காட்டுவதற்கேயாகும்.
இதன்மூலம் மக்கள் பல சிரமங்களை எதிர்கொள்வதுடன், அவர்களது பணமும் வீண் விரயம் செய்யப்படுகின்றது. இதனை ஐ.தே.கட்சி ஒரு போதும் ஏற்காது.
சார்க்கையொட்டி வீடுகள் உடைக்கப்படுகின்றன. பிச்சைக்காரர்கள் தலைநகரிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கு காரணம் இலங்கை செல்வந்த நாடென காட்டுவதற்கேயாகும். இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் நாளைய தினம் சார்க்குக்கு வருகை தந்த வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு இராப்போஜன விருந்து அளிக்கவுள்ளார். இவ்விருந்தின் ஒரு சாப்பாட்டின் விலை 10 ஆயிரம் ரூபாவாகும். மற்றும் இசைக்கேளிக்கை மற்றும் ஒலி ஒளியமைப்பு முதலானவற்றுக்கான ஏனைய செலவுடன் இதற்கு 21 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது.
நாட்டு மக்கள் விலைவாசி உயர்வினால் தமது மூன்று வேளை உணவை உட்கொள்ள முடியாத கஷ்ட நிலையில் உள்ளபோது, இவ்வாறு அம்மக்களது பணம் வீண் விரயம் செய்யப்படுகின்றது. இது அரசால் மேற்கொள்ளப்படும் தவறான காரியங்களில் ஒன்றாகும். இந்த சார்க்கின் மூலம் நாட்டுக்கு கிடைக்கக் கூடிய நன்மையினை அரசாங்கம் முடிந்தால் பட்டியலிட்டு காண்பிக்கட்டுமென நான் சவால் விடுக்கின்றேன்.
எமது வட மத்திய மாகாண முதலமைச்சர் வேட்பாளரான ஜானக பெரேராவுக்கு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதன்படி பாதுகாப்பு வழங்காமல் ஆறுமுகம் தொண்டமானுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசாங்கம் பக்கச் சார்புடன் செயற்படுகின்றது.
அரசாங்கம் தமக்கு ஆதரவாக செயற்படுவோருக்கு சட்டத்தை அமுல்படுத்தாது கைவிட்டு தமக்கு எதிரானவர்களுக்கு சட்டத்தை அமுல்படுத்தி வருகின்றது.