பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) 15 ஆவது உச்சி மாநாட்டு அமர்வுகளில் மியான்மாரும் அவுஸ்திரேலியாவும் புதிய பார்வையாளராக பங்கேற்கவுள்ளன.
ஏற்கனவே, 7 நாடுகள் சார்க் மாநாட்டில் அவதானிகள் அந்தஸ்தைப் பெற்றுள்ளன.
இப்போது புதிதாக மியான்மாரும் அவுஸ்திரேலியாவும் இணைந்திருப்பதாக இலங்கையின் மேலதிக வெளிவிவகாரச் செயலாளர் பிரசாத் காரியவசம் தெரிவித்தார்.
அவதானிகள் பட்டியல் நீண்டு செல்வதானது சார்க் அமைப்பின் பொருளாதார முக்கியத்துவத்தை அதிகரிக்கச் செய்வதாக சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவும் மியான்மாரும் பார்வையாளராக அனுமதிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையானது சார்க்கின் அரசியல் முக்கியத்துவத்துக்கான அறிகுறியாக காணப்படுவதுடன் வர்த்தக ரீதியில் அதன் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துவதாக பீரிஸ் கூறியுள்ளார்.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், சீனா , தென்கொரியா , ஈரான் , மொரீஸியஸ் ஆகியன தற்போது சார்க்கின் அவதானிகள் அந்தஸ்தைப் பெற்றுள்ளன.