*சப்மா மாநாட்டில் அமைச்சர் யாப்பா கவலை
எம்.ஏ.எம்.நிலாம்
ஊடகத்துறை இன்று அரசியலிலேயே அதிகளவு கவனத்தை செலுத்துவதாகவும் அபிவிருத்தி சம்பந்தமான விடயங்கள் பாரதூரமான முறையில் புறக்கணிக்கப் படுவதாகவும் ஊடக, தகவல்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கவலை தெரிவித்தார்.
தெற்காசிய சுதந்திர ஊடக அமைப்பின் (சப்மா) நான்காவது மாநாட்டை நேற்று புதன்கிழமை பிற்பகல் கொழும்பு ட்ரான்ஸ் ஏசியா ஹோட்டலில் வைபவ ரீதியாக ஆரம்பித்துவைத்து உரையாற்றிய அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, அதிகளவுக்கு அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும் மக்களுக்கு அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் விடயங்கள் மற்றும் சந்தர்ப்பங்கள், அவர்களின் பிள்ளைகளின் சிறப்பான எதிர்காலம் குறித்த விடயங்களுக்கு அதிகளவு முக்கியத்துவம் வழங்காத தன்மை காணப்படுவதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.
அமைச்சர் யாப்பா தமதுரையில் மேலும் கூறியதாவது;
அமைவிடம் மற்றும் தொழில் என்ற இரு விடயங்களால் நாம் இங்கு ஒன்றுபட்டுள்ளோம். மொழி, கலாசாரம், இனம், மத நம்பிக்கை என்ற வேறுபாடுகளுக்கு அப்பால் நாம் யாவரும் தெற்காசியர்கள். உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் நாம் ஒரேவிதமான தன்மையைக் கொண்டிருக்கிறோம்.
"ஊடகம்' என்று அழைக்கப்படும் பரந்த விடயத்துடன் நாம் யாவரும் இணைந்திருக்கிறோம். எமது பணிகள், கரிசனைகள், அச்சங்கள், நம்பிக்கைக்கான காரணம் என்று வரும்போது வேறுபட்ட விடயங்கள் மேலெழுந்து வருகின்றன.
தெற்காசியர்களாகிய எம்மிடம் பொதுவான தன்மைகள், கலாசார, பூகோள, வரலாற்று, பொருளாதார ரீதியாக பகிர்ந்துகொள்ளும் கரிசனைகள் உள்ளன. இவை பங்குடமையை ஏற்படுத்துகின்றன. எமது பிராந்தியத்தில் சுற்றாடல் தொடர்பான கரிசனைகள், வறுமை, அரசியல் குழப்பங்கள் பயங்கரவாதத் தாக்குதல்களால் அதிகரித்துவரும் அச்சுறுத்தல்கள் போன்றவற்றை நாம் கொண்டிருந்தாலும் ஜனநாயக கோட்பாடுகளில் பற்றுறுதியுடன் இருப்பதுடன் எமது மக்களுக்கு சிறப்பான சந்தர்ப்பங்களை வழங்குவதற்கான ஆற்றலை விருத்தி செய்து வருகின்றோம்.
இன்று இலங்கையில் எமது ஜனநாயகத்துக்கும் பிரஜைகளுக்கும் அரச, தனியார் உடமைகளுக்கும் எமது வாழ்க்கை முறைமைக்கும் உலகிலேயே மிக மோசமான பயங்கரவாத இயக்கமான புலிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இதுவரை அதிகாரத்துக்காக மக்களை தெரிவு செய்கின்றோம். அதிகாரத்திலிருந்து நீங்கவும் வாக்களிக்கின்றோம். இலவச சுகாதார பராமரிப்பு, இலவசக்கல்வி மற்றும் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துவருகின்றோம்.
இன்று முன்னாள் பயங்கரவாதி ஆயுதங்களை கைவிட்டு கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராகியுள்ளார். இன்று புலிகள் மட்டுமே தனிநாடு பற்றிக் கதைக்கின்றனர். பயங்கரவாதத்திற்கு இடமில்லை என்று நாம் கூறுகின்றோம். தமிழ் மக்களினதும் ஏனைய சமூகங்களினதும் நியாயபூர்வமான துன்பங்களுக்கு தீர்வு காண நாம் தயாராக உள்ளோம்.
விவாதம், கலந்தாலோசனை, பிரதிநிதித்துவம், வெளிப்படைத்தன்மை, பதிலளிக்கும் கடப்பாடு போன்ற ஜனநாயக கோட்பாடுகளின் அடிப்படையில் நீதியை வழங்கவும் நீடித்த சமாதானத்தை ஏற்படுத்தவும் தயாராகவுள்ளோம். இந்த விடயங்களில் ஊடகம் முக்கியமான பங்களிப்பினை வழங்கியுள்ளது.
இதேவேளை, அபிவிருத்தி குறித்து ஊடகங்கள் அதிகளவுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அத்துடன், தெற்காசிய செய்தி முகவர் நிலையத்தை உருவாக்க வேண்டுமென்றே யோசனையையும் நான் முன்வைக்கின்றேன். இதற்கான அடித்தளத்தை சப்மா இட்டுள்ளது. எமது கதைகளை நாமே எழுதுவதற்கும் செய்தி முகவர் நிலையம் எமது மக்களுடையது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவும் இந்த தெற்காசிய செய்தி முகவர் நிலையம் வழி சமைக்கும். ஒருமைப்பாடு, மகிழ்ச்சி, பரிவு, ஞானம், இதழியல் துறை அனுபவங்களை பெற்றுக்கொள்ள வாழ்த்துகிறேன்.