*இன்று கொழும்பு வருகிறார்
நேபாளப் பிரதமர் கிரிஜா பிர சாத் கொய்ராலா இன்று வியாழக்கிழமை கொழும்புக்கு வருகை தரவுள்ளார்.
சார்க் உச்சிமாநாட்டில் அவர் கலந்து கொள்வாரென அமைச்சரவை அறிவித்திருந்த போதும், அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெற்ற மாவோயிஸ்ட்டுகள் கிரிஜா பிரசாத் கொய்ராலாவின் கொழும்புப் பயணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரின் வருகை குறித்து சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நேற்று புதன்கிழமை காலை நேபாள காங்கிரஸ்,யூ.எம்.எல், மாவோயிஸ்ட்டுகள், மாதேஸி ஜனாதிகர் போரம் ஆகிய நான்கு கட்சிகளின் தலைவர்கள் பிரதமரின் வாசஸ்தலத்தில் ஒன்றுகூடி பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா தலைமையில் 35 பேரடங்கிய தூதுக்குழுவை சார்க் மாநாட்டுக்கு அனுப்புவதற்கு இணக்கம் காணப்பட்டது.
இந்த மாதிரியான முக்கியமான வெளிவிவகாரக் கொள்கைகளில் கட்சிகளுடன் கலந்தாலோசனை நடத்தாத தனது தவறை பிரதமர் கொய்ராலா ஏற்றுக் கொண்டாரென தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
காபந்துப் பிரதமரான கொய்ராலா சார்க் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வது சட்ட பூர்வமற்ற விடயமென ஆரம்பத்தில் அவரின் உத்தேசப் பயணம் தொடர்பாக மாவோயிஸ்ட்டுகள் கடும் ஆட்சேபனை தெரிவித்திருந்ததுடன் ஜனாதிபதி ராம்பரன் யாதவை கொழும்புக்கு அனுப்பலாமென்ற யோசனையை கட்சிகள் முன்வைத்திருந்தன.
இப்போது கட்சிகள் ஒன்று கூடி தீர்மானம் எடுத்திருப்பதால், சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.