சார்க் உச்சி மாநாட்டின் பாதுகாப்பை முன்னிட்டு இவ்வார கடைசியில் யாழ். குடாநாட்டுக்கான பயணிகள் விமான சேவைகள் இடைநிறுத்தப்படுமென அரசு தெரிவித்துள்ளது.
கொழும்புக்கும் குடாநாட்டுக்குமிடையிலான பயணிகள் விமான சேவை பாதுகாப்புக் காரணங்களுக்காக நாளை 1 ஆம் திகதி முதல் 3 ஆம் திகதி வரை நிறுத்தப்படுமென சிவில் விமான அதிகார சபைத் தலைவர் பராக்கிரம திஸநாயக்க தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு தரப்பினரின் வேண்டுகோளையடுத்தே சார்க் உச்சி மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் இந்தப் பயணிகள் விமான சேவை இடைநிறுத்தப்பட்டிருக்குமெனவும் தெரிவித்தார்.
சார்க் மாநாட்டையொட்டி கொழும்பு மாநகரின் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் முப்படையினரும் பொலிஸாரும் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் இந்தியப் பிரதமரின் பாதுகாப்புக்காக "கறுப்புப் பூனைகள்' படையணி இங்கு வருகை தந்துள்ள அதேநேரம் விமான எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக கொழும்பு நகரில் சக்தி வாய்ந்த ராடர்களைப் பொருத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை விமானப் படையினரும் தங்கள் வான் பாதுகாப்பு பொறிமுறையை முடுக்கிவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.