சார்க் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக சம்பந்தப்பட்ட நாடுகளின் தலைவர்கள் இன்று வியாழக்கிழமை முதல் கொழும்புக்கு வருகைதரவுள்ளனர்.
15 ஆவது சார்க் உச்சிமாநாடு எதிர்வரும் 2 ஆம், 3 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் சார்க்கில் அங்கம் வகிக்கும் எட்டு நாடுகளின் தலைவர்களும் பங்குபற்றவுள்ளனர். இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சார்க் தலைவர்கள் இன்றும் நாளையும் கொழும்பு வரவுள்ளனர்.
இந்திய, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்த்தான் தலைவர்கள் நாளை வெள்ளிக்கிழமை விசேட விமானங்கள் மூலம் கொழும்பு வரவுள்ளனர்.
அதேநேரம், ஏனைய தலைவர்கள் இன்றும் நாளையும் வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நாளை நண்பகல் 12.45 மணியளவிலும், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி நாளை பிற்பகல் 3 மணியளவிலும் ஆப்கான் ஜனாதிபதி ஹமீட் ஹர்சாய் நாளை மாலை 6.40 மணியளவிலும் இங்கு வரவுள்ளனர்.
நேபாள பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா, பூட்டான் மன்னர் ஜிக்மே சிங்யே மற்றும் மாலைதீவு ஜனாதிபதி மமூம் அப்துல் கையூம் ஆகியோர் இன்று முதல் நாளை வரை இங்கு வரவுள்ளனர்.